|
கோவிலூரில் நாச்சியப்ப சுவாமிகள் பாலிடெக்னிக் கல்லூரி துவக்க விழா Sep 23, 09 |
|
காரைக்குடி, செப். 22: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோவிலூரில் நாச்சியப்ப சுவாமிகள் பாலிடெக்னிக் கல்லூரி துவக்க விழா நடைபெற்றது.
விழாவில், தமிழக இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், கல்லூரியைத் துவக்கி வைத்துப் பேசியதாவது:
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஊரில் கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வியைத் தரவேண்டும் என்று இக்கல்லூரியைத் தொடங்கி இருக்கிறார்கள். இங்கு, மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் கல்வியை வழங்கி வருவது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.
இன்னும் 5 ஆண்டுகளில் இந்த வளாகம் பல்கலைக்கழகமாக வளர வேண்டும் என்று சுவாமி விரும்புகிறார். அதையே நானும் விரும்புகிறேன்.
குன்றக்குடி, கோவிலூர் போன்ற மடாலயங்கள் ஆன்மிகத்தோடு கல்வியையும் வளர்த்து வருகின்றன. இந்து சமய அறநிலையத் துறை தமிழகத்தில் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றன. அதில், 5 கல்லூரிகள், 36 பள்ளிகள் அடங்கும். கல்வி ஒன்றுதான் வாழ்வில் அழிக்க முடியாத சக்தி என்றார் அமைச்சர்.
விழாவில், கோவிலூர் நாச்சியப்ப ஞானதேசிக சுவாமிகள் பேசுகையில், "ஏழ்மைத்தனம் மிகவும் முக்கியமானதுதான். ஏழ்மையின் அருமை தெரியும் போதுதான் உயர முடியும். பணம் நல்ல பணமாக இருக்கவேண்டும். பணக்கார நிலையிலிருந்து வரும்போது எதையும் அறியமுடியாது. நம் சமுதாயத்தில் ஏழை, எளியோருக்கு உணவு, கல்வி வழங்குவது மிகவும் முக்கியப் பணியாகும். அந்த நிலையில் தான் இங்கு கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இக்கல்வி வளாகம் விரைவில் ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறவேண்டும் என்றார்.
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசுகையில், "கற்றல் சமூகத்தின் தேவை. எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வித் திட்டம் உருவாக்கவேண்டும் என்று தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்தை அரசு கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது' என்றார்.
விழாவில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாக அறங்காவலர் கருமுத்து. கண்ணன், தமிழக அரசின் சிற்பக் குழுத் தலைவர் முத்தையா ஸ்தபதி, பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார், ஆடிட்டர் முரளி, உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் ஏஎம். மூர்த்தி, சென்ட்ரல் பள்ளி முதல்வர் பாலச்சந்திரன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜெயசீலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.லூரித் தாளாளர் என். மெய்யப்பன் வரவேற்றுப் பேசினார்.
source : Dinamani 23/09/09 |
|
|
|
|
|