|
NEWS REPORT: விநாயகர் சதுர்த்தி : பிள்ளையார்பட்டியில் கொடியேற்றம் Aug 20, 14 |
|
|
|
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காலை 9 மணிக்கு மூஷிக வாகனம் பொறிக்கப்பட்டுள்ள வெண்கொடி திருக்கோயிலைச் சுற்றி வலம்வந்து கொடி மரத்துக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்துக்கு பூஜை நடைபெற்றது. கொடி மரத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த அங்குசத் தேவருக்கு சிறப்பு கலசங்களில் வைக்கப்பட்டிருந்த புனித நீர், பால், தயிர், மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர், கொடிப் படத்துக்கு புஷ்பாஞ்சலி அர்ச்சனை நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க காலை 9.45 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, விமானத்தின் மேல் உள்ள கொடி மரத்தின் உச்சியிலும் வெண்கொடி சுற்றப்பட்டது.
அத்துடன், கொடி மரத்தைச் சுற்றிலும் தர்ப்பை புற்களால் சுற்றப்பட்டு, பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, இரவு 8.30 மணிக்கு மூஷிக வாகனத்தில் அருள்மிகு கற்பக விநாயகர் எழுந்தருளி, திருமறை பாராயணம் முழங்க திருவீதி உலா வந்தார். இத் திருவீதி உலாவின்போது வலையபட்டி நாகஸ்வர வித்வான் பூமிநாதன் குழுவினரின் நாகஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்கள் ஆ. முத்துப்பட்டணம் சித.நா. நாச்சியப்பச் செட்டியார், கண்டனூர் சித.சித. நாச்சியப்பச் செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர். |
|
|
|
|
|