|
அரசு பள்ளியில் படித்ததால் பெருமை : முன்னாள் மாணவர்கள் உருக்கம் Aug 24, 14 |
|
காரைக்குடி மு.வி., அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்த மாணவர்கள், 25 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து, மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
காரைக்குடியில், 1943ல் மு.வி.,அரசு மேல்நிலை பள்ளி துவக்கப்பட்டது. இங்குள்ள பலருக்கு அறிவுக்கண் திறந்து, அறிவூட்டிய பள்ளி. பொன்விழாவை கடந்தும் மாணவர்களுக்கு வகுப்பறையாக வாசம் தரும், அதே ஓட்டு பள்ளி கட்டடம், உருக்குலையாத மரங்களால் செய்த டேபிள்கள் இங்கு அமர்ந்து படித்து சென்ற மாணவர்களின் வரலாற்றை இன்றைக்கும் நினைவு கூர்கிறது. காலத்தின் மாற்றம் மாணவர்களை மாற்றினாலும், பள்ளியின் நிலைமையோ மாறாமல் மணம் வீசி கொண்டிருக்கிறது. அரசு பள்ளியை கிள்ளுக்கீரையாய் நினைத்து ஒதுங்கும், ஒரு சிலருக்கு மத்தியில், இந்த பள்ளியால் நான் பெருமை பெற்றேன், என்னால் இந்த பள்ளி பெருமை பெறும் என்று, 1990-92-ல் பிளஸ் 1, பிளஸ் 2 பயின்ற மாணவர்கள், ஒன்று கூடி தங்களால் முடிந்ததை, இந்த பள்ளிக்கு செய்வோம் என உறுதி அளித்தனர். சென்னை, எஸ்.ஐ., மலர்வண்ணன் கூறும்போது; ஓராண்டாக இங்கு பயின்ற பழைய மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டோம். 120 பேரில், தற்போது 58 பேர் மட்டுமே சந்தித்துள்ளோம். என் உடன் படித்த மாணவியை சென்னையில் சந்தித்தேன். அப்போது அளவில்லாத மகிழ்ச்சி. அதே மகிழ்ச்சி, பிற மாணவர்களையும் சந்தித்தால் எப்படி இருக்கும், என நினைத்து, பழைய மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தோம்.
சி.சுபா, அமெரிக்கா, (இன்சூரன்ஸ் நிறுவன திட்ட மேலாளர்) : அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், சிங்கப்பூர், அபுதாபி, கத்தார் போன்ற நாடுகளிலிருந்து, இந்த சந்திப்புக்காக வந்துள்ளோம். அரசு பள்ளியில் படித்தால் அறிவு வளராது, என்ற தற்போதைய நிலையை மாற்றி, அரசு பள்ளிகளும் சாதிக்கும் என்பதை உணர வேண்டும், என்றே நாங்கள் இங்கு கூடியுள்ளோம். நாங்கள் அனைவரும் சேர்ந்து, இந்த பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து தருவோம், என்றார். |
|
|
|
|
|