|
NEWS REPORT: M.A.M.ராமசாமிக்கு பின்னப்பட்ட வலை: சினிமா திரைக்கதையையும் மிஞ்சும் நிஜக்கதை Aug 27, 14 |
|
ஒரு ஆண்டுக்கு முன் வரை, தனக்கு இப்படியொரு இக்கட்டு ஏற்படும் என, கனவிலும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார், 16,000 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியான எம்.ஏ.எம்.ராமசாமி. எந்த சொத்துக்கள் மூலம், அவர் சந்தோஷத்தை அடைந்திருக்க வேண்டுமோ, அதே சொத்துக்கள் தான், இன்றைக்கு அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளன.
பல தொழில்கள்:
எம்.ஏ.எம்.ராமசாமி, இந்தியாவில் உள்ள பிரபலமான தொழிலதிபர்களில், சொத்துக்களின் அடிப்படையில், 18வது இடத்தில் இருப்பவர். கல்வி, சிமென்ட், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், தோட்டத் தொழில், போக்குவரத்து, கப்பல் வணிகம், கிரானைட், ஏற்றுமதி - இறக்குமதி, ஜவுளித் தொழில், நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருபவர். சந்தையில் பிரபலமான, 'செட்டிநாடு சிமென்ட்' நிறுவனம், இவருடைய தொழில் குழுமத்தின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, எம்.ஏ.எம்.ராமசாமிக்கும், அவரது வளர்ப்பு மகனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளால், இந்த மாபெரும் தொழில் குழுமத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னையின் உச்சகட்டமாக, எம்.ஏ.எம்.ராமசாமியை, செட்டிநாடு சிமென்ட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. இதற்காக, பங்குதாரர்களின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஆக., 27ல் (நேற்று) நடத்தப்பட இருந்தது.இதை அறிந்த எம்.ஏ.எம். ராமசாமி தரப்பினர், அப்படியொரு முடிவெடுத்தால், அதை ஏற்க வேண்டாம் என, கம்பெனி சட்ட வாரியத்தின் பதிவாளர், மனுநீதி சோழனை அணுகினர். இதற்காக, 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது தான், நேற்று முன்தினம், மனுநீதி சோழனை, சி.பி.ஐ., போலீசார், கைது செய்ததாக, தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன், லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக, எம்.ஏ.எம்.ராமசாமி மீதும் வழக்குப் பதிவாகி உள்ளது.
முறைகேடு:
எம்.ஏ.எம்.ராமசாமிக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து, அவர் வசிக்கும் 'செட்டிநாடு பேலஸ்' வட்டாரங்கள் கூறியதாவது:எம்.ஏ.எம்.ராமசாமி குழும நிறுவனத்தில் முக்கியமானது, சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகம். இதன் இணைவேந்தராக ராமசாமி இருந்தார். அவருக்கு பல்வேறு பணிகள் இருந்த காரணத்தால், பல்கலையின் மொத்த நிர்வாகத்தை, அடுத்தடுத்து வந்த துணைவேந்தர்களிடம் ஒப்படைத்து இருந்தார்.பல்கலையின் பல்வேறு தரப்பட்ட பணியிடங்களை நிரப்புதல், 'சீட்'கள் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடந்தன. இதற்காக, சிதம்பரத்தில், ஏராளமான புரோக்கர்கள் உருவாகி, திடீர் பணக்காரராகினர். இதை கேள்விப்பட்ட எம்.ஏ.எம்.ராமசாமி, தவறுகளை முற்றிலுமாக குறைத்து, 'அட்மிஷனை' முறைப்படுத்த, தனக்கு உதவியாக இருக்கும் நபர் ஒருவரிடம், பொறுப்பை ஒப்படைத்தார்.இதன் பிறகு, அண்ணாமலை பல்கலையில், புதிய, 'டீம்' உருவாகி, அவர்களும் முறைகேடுகளில் ஈடுபட துவங்கினர்.
செல்வாக்கு:
இதை தவிர்க்க, சிதம்பரத்தை சேர்ந்த உள்ளூர் நபர் ஒருவரிடம், பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவருக்கு, எம்.ஏ.எம்.ராமசாமியிடம் பெரிய அளவில் செல்வாக்கு உருவானது. இது ஏற்கனவே, அண்ணாமலை பல்கலையில் கோலோச்சி கொண்டிருந்த, 'உதவி' நபர் டீமுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில், உள்ளூர் ஆசாமி கொல்லப்பட்டார்.இந்த சூழ்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன், எம்.ஏ.எம்.ராமசாமி, தன் உறவினர் வட்டத்தில் இருந்து, ஐயப்பன் என்பவரை வளர்ப்பு மகனாக தத்தெடுத்தார். அவருக்கு, குடும்ப பெயரான, 'முத்தையா' என்ற பெயர் சூட்டப்பட்டது.அவர், சென்னையில் உள்ள பிரமாண்ட பங்களாவில் தங்கினார். அவருக்கு, எம்.ஏ.எம். ராமசாமியே திருமணமும் செய்து வைத்தார்.இதே நேரத்தில், 'உதவி' நபரை ஒதுக்கி வைத்த, எம்.ஏ.எம்.ராமசாமி தரப்பினர், அண்ணாமலை பல்கலையின் அட்மிஷனை கவனிக்க, மூன்று பேரை நியமித்தனர். அவர்களும், ஒரு சில ஆண்டுகளில், கோடீஸ்வரராகினர்.குறிப்பாக, கடலுார் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த ஒருவரின் இன்றைய சொத்து மதிப்பு, 100 கோடி ரூபாயை தாண்டும் என்று கூறப்படுகிறது.இந்த சூழ்நிலையில், வளர்ப்பு மகன் முத்தையா, குழும நிறுவனத்தில் உள்ள அனைத்து நிறுவனங்கள் மீதும் கவனம் செலுத்த தொடங்கினார். சொத்துக்களையும் நிர்வகிக்கும் அளவுக்கு அவரது வளர்ச்சி இருந்தது. இதன் பின்னணியில், 'உதவி' நபர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
உறவினர் கோபம்:
இந்த சமயத்தில், எம்.ஏ.எம்.ராமசாமியின் மணிவிழா நடந்தது. அப்போது, ராமசாமியை வாழ்த்தி, சென்னையில் உள்ள பிரமாண்ட பங்களாவின் உள்ளேயும், வெளியேயும், பதாதைகள் அமைக்கப்பட்டன. அவற்றில், 'உதவி' நபரின் படங்களும் இடம் பெற்றன. இதனால் எம்.ஏ.எம்.ராமசாமியின் நெருங்கிய பெண் உறவினர் ஒருவர் கடும் கோபம் கொண்டு, அவற்றை நீக்க உத்தரவிட்டார். இதன் பிறகு, வளர்ப்பு மகனை துாண்டிவிட்டு, 'உதவி' நபர், எம்.ஏ.எம்.ராமசாமி தரப்புக்கு எதிரான வேலைகளை சுறுசுறுப்பாக்கினார். எம்.ஏ.எம்.ராமசாமிக்கு நெருக்கமான ஊழியர்கள் பலர், நிர்வாகத்தில் இருந்து நீக்கப்பட்டனர். அண்ணாமலை பல்கலையில் நடக்கும் முறைகேடுகள், தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த பல்கலையை, அரசு எடுத்துக் கொண்டது. பல்கலையின் சிறப்பு அதிகாரியாக, ஐ.ஏ.எஸ்.அதிகாரி சிவதாஸ் மீனா நியமிக்கப்பட்டார்.
கேமராக்கள்:
இப்படி, படிப்படியாக, எம்.ஏ.எம்.ராமசாமியை முடக்கும் பணிகள் தீவிரமாக்கப்பட்டன. 'செட்டிநாடு பேலஸ்' பங்களாவில், மும்பையை சேர்ந்த தனியார் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டனர். பங்களாவை சுற்றி, கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டன. தனக்கு எதிராக சதி நடக்கிறது என, சென்னை போலீசில், எம்.ஏ.எம்.ராமசாமி புகார் கொடுக்கும் அளவுக்கு நிலைமை சென்றது.இத்துடன், நேற்று முன்தினம், கம்பெனி சட்ட வாரிய பதிவாளர் மனுநீதிசோழன், 10 லட்சம் ரூபாயுடன் கைதானது, எம்.ஏ.எம்.ராமசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது போன்ற சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. சமீபத்தில் நடந்த சம்பவம் அவருக்கு விரிக்கப்பட்ட வலை.இவ்வாறு, 'செட்டிநாடு பேலஸ்' பங்களா வட்டாரங்கள் கூறின.
source : Dinamalar |
|
|
|
|
|