|
NEWS REPORT: சில்லிட வைக்கும் A L S "ஐஸ் பக்கெட் சவால்' Aug 31, 14 |
|
ALS எனப்படும் நரம்பு சம்பந்தமான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அந்த தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டவும் உருவாக்கப்பட்டதுதான் இந்த ஐஸ் பக்கெட் சவால். சமூக வலைதளங்களின் மூலம் உலகில் வேகமாக இது பரவி வருகிறது.
அமியோடிராபிக் லேட்டரல் ஸ்கிலிரோசிஸ் (A L S ) எனப்படும் நோய் நரம்புகளை பாதிக்கும். இந்த நோய் பாதித்தவர்கள் மூச்சு விட, பேச மற்றும் உணவை விழுங்க சிரமப்படுவர். அவர்களால் உடலின் செயல்பாட்டை கட்டுப்படுத்த முடியாது. ஏ.எல்.எஸ்., நோய் தாக்கியவர்கள் 3-4 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ முடியும். நோயாளிகளில் 4 சதவீதம் பேர் மட்டுமே 10 ஆண்டுகள் வாழ்கின்றனர். உலக மக்கள் தொகையில், லட்சத்தில் இரண்டு பேருக்கு இந்த நோய் ஏற்படுகிறது.இந்த சவாலை எதிர்கொள்பவர்கள் ஒரு பக்கெட் குளிர்ந்த நீரை தலையில் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் தங்களுக்கு தெரிந்த மூன்று பேரை இந்த சவாலை 24 மணி நேரத்துக்குள் செய்யும் படி கேட்டுக் கொள்ள வேண்டும். அவர்கள் சவாலை ஏற்காவிட்டால் ஏ.எல்.எஸ்., அசோசியேஷனுக்கு 6 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமாக நன்கொடை வழங்க வேண்டும்.
அமெரிக்காவை சேர்ந்த பேஸ்பால் வீரரும், ALS நோயாளியுமான பீட் பிராட்ஸ் முதன் முதலில் ஐஸ் பக்கெட் சவாலை சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தி சமூக வலைதளங்களில் வெளியிட்டார். பிராட்ஸ்க்கு இந்த யோசனையை அவரது நண்பர் தெரிவித்துள்ளார். தற்போது உலகம் முழுவதும் வேகமாக இந்த சவால் பரவி வருகிறது. இதன்மூலம் ஏ.எல்.எஸ்., தொண்டு நிறுவனத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை குவிந்துள்ளது. இது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், ஹாலிவுட் நட்சத்திரம் டாம் குரூஸ், ஸ்டீவன் பீல்பெர்க், பில் கேட்ஸ், ஷகிரா, கேடி பெர்ரி, லேடி ககா, உசைன் போல்ட், ஐஸ்டின் பைபர், மார்க் சூக்கர்பெர்க் மற்றும் கால்பந்து, பேஸ்பால் வீரர்கள் என பல பிரபலங்கள் இந்த சவாலில் ஈடுபட்டுள்ளனர்.இந்தியாவில் அபிஷேக் பச்சன், ரித்தேஸ் தேஷ்முக், பிபாஷா பாசு, ஹன்சிகா மோத்வானி, சானியா மிர்சா மற்றும் இந்திய ஹாக்கி அணியினர் இதனை மேற்கொண்டனர்.
நோய் குறித்து விழிப்புணர்வு மற்றும் நன்கொடை கிடைக்கிறது என்றாலும் பல நாடுகளில் இதனை எதிர்க்கின்றனர். தண்ணீரை வீணாக்குகின்றனர் எனவும், விளம்பரம் தேடுகின்றனர் எனவும் சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும் குளிர்ந்த நீரை தலையில் ஊற்றுவதால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றனர். ஸ்காட்லாந்தில் ஒரு இளைஞர் இந்த சவாலை மேற்கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். |
|
|
|
|
|