|
NEWS REPORT: உலகிலேயே கண்ணதாசனுக்கு இணையான கவிஞன் கிடையாது: இளையராஜா Sep 14, 14 |
|
கவியரசர் கண்ணதாசனுக்கு இணையான ஒரு கவிஞன் இந்த உலகத்திலேயே கிடையாது என்று இசையமைப்பாளர் இளையராஜா புகழாரம் சூட்டிப் பேசினார்.
காரைக்குடியில் கவியரசர் கண்ணதாசன் சமூக நல அறக்கட்டளை சார்பில் 24-ஆம் ஆண்டு கவியரசர் கண்ணதாசன் விழா கம்பன் மணிமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர், வசனகர்த்தா பஞ்சு அருணாசலத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி இளையராஜா பேசியது: நான் பாடுபவன். நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல் என்ற பாரதியின் பாடலைப் போல.. நான் பாட்டுக்காரன். பேச்சுக்காரன் அல்ல.
இந்த மண்ணிலே எனது காலடிகள் படாத இடமே கிடையாது. நான் பார்த்த காரைக்குடியை நீங்கள் பார்க்க முடியாது. நீங்கள் வளர்கின்ற காரைக்குடியை நான் அன்று நினைத்துப் பார்த்திருக்க முடியாது.
இந்த கம்பன் மணிமண்டபம், தமிழ்த்தாய் கோயிலை சா. கணேசன் கட்டுவதற்கு முன்னாலேயே இங்கே நான் வந்திருக்கிறேன்.
பொன்னுக்குத் தங்கமனசு என்ற படத்திற்கு இசையமைக்க வாய்ப்புக் கிடைத்தது.இயக்குநர் பி. மாதவன் இயக்கிய படம் அது. அந்தப்படத்திற்காக பாடல் எழுத கவிஞர் கண்ணதாசன் வரப்போகிறார் என்றதும் மகிழ்ச்சி. அன்றைக்கு கவிஞர் கண்ணதாசன், ஜெயகாந்தன் என்றால் எங்களுக்கு அவர்கள் சூப்பர் ஸ்டார்.
கவிஞர் கண்ணதாசனுடன் பஞ்சு அருணாசலமும் உடன் வந்தார். இயக்குநர் மாதவன் படத்தின் காட்சி குறித்து கூறினார். தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே... என்ற பாடல். இந்த பாடலுக்கான டியூன் கன்னடப்படம் ஒன்றில் போடப்பட்டது. அதற்காக கன்னடக்கவிஞர் ஒருவாரம் எடுத்துக்கொண்டார்.
ஆனால் இயக்குநர் மாதவன், காட்சியமைப்பை விளக்க, நான் டியூன் பாடிக்காட்ட அந்த இடத்திலேயே பாட்டு எழுதிக்கொடுத்தார் கவிஞர் கண்ணதாசன். அவருக்கு இணையான கவிஞன் இந்த உலகத்திலேயே கிடையாது.
எனக்கு முதன் முதலில் அன்னக்கிளி படத்திற்கு இசையமைக்க வாய்ப்புத் தந்தவர் பஞ்சு அருணாசலம். மச்சானை பார்த்தீங்களா... பாடலை மேஜையை தட்டி பாடிக்காட்டினேன். அந்தப்படத்திற்கு கண்ணதாசன் பாடல் எழுதுகிறார் என்றதும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
ரஜினி, கமல் இருவரும் ஒரே நேரத்தில் பிரபலமாகி வந்து கொண்டிருந்தனர். இனி ஒரே படத்தில் இருவரும் நடிப் பதில்லை என்கிற முடிவை பஞ்சு அருணாசலத்திடம் கூறினார்கள். அவர்களிடம் தனித்தனியாக கால்ஷீட் வாங்கி கல்யாணராமன், ஆறிலிருந்து அறுபதுவரை வெற்றிப் படங்களை தந்தவர் பஞ்சு அருணாசலம். அந்தப்படங்களுக்கு ஒரு வாரத்தில் கதை அமைத்து இயக்கியவர் அவர். அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது. எனக்கு இளையராஜா என பெயரை கொடுத்தவரே பஞ்சு அருணாசலம் தான்.
இதையடுத்து ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க "இதயம் ஒரு கோயில்...' என்ற பாடலை அவர் பாடினார்.
விழாவில் பஞ்சு அருணாசலம் ஏற்புரையாற்றினார். கண்ணதாசன் சமூக நல அறக்கட்டளைத்தலைவர் வி. ரவி வீரப்பன், பொதுச் செயலர் கவிஞர் அரு. நாகப்பன், இ.எம். சுதர்சனநாச்சியப்பன் எம்.பி, பா.ஜ.க.தேசிய செயலர் ஹெச் ராஜா, சக்தி திருநாவுக்கரசு, மெய்யப்பன் உள்ளிட்ட பலர் பேசினர். |
|
|
|
|
|