|
NEWS REPORT: அமெரிக்காவில் 700 கோவில்களை கட்டி ஆன்மிக சேவையில் சாதித்த அழகப்ப அழகப்பன் Nov 3, 14 |
|
|
|
அமெரிக்காவில், 700க்கும் அதிகமான இந்து கோவில்களை கட்டி, பெரும் ஆன்மிக சேவை செய்த அழகப்பா அழகப்பன், 88, சமீபத்தில் காலமானார்.
அமெரிக்காவில், தற்போது சிறியதும், பெரியதுமாக, 1,000க்கும் அதிகமான இந்து கோவில்கள் உள்ளன. ஆனால், இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக, அங்கு, முதல் முதலாக இந்து கோவிலை கட்டியவர் என்ற பெருமைக்குரியவர், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தானைச் சேர்ந்த அழகப்பா அழகப்பன்.
கடந்த 1960களில், லண்டனில், பி.பி.சி., செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய போது, அப்போதைய போப் ஆண்டவரை பேட்டி எடுத்த பெருமையும் இவருக்கு உண்டு.
இதன்பின், ஐ.நா., உயரதிகாரியாக பணியாற்றுவதற்காக, 1961ல், அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு சென்றார். 1968ல், விடுமுறைக்காக அழகப்பன், இந்தியாவுக்கு வந்திருந்த போது, கடவுள், தன் கனவில் தோன்றி, 'என்' என்ற எழுத்தில் துவங்கும் ஊரில், கோவில்கள் அமைக்கும்படி கூறியதாக அழகப்பன் தெரிவித்தார்.இதையடுத்து, மீண்டும் அமெரிக்கா திரும்பிய அவர், தன் இந்திய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, 'தி இந்து டெம்பிள் சொசைட்டி' என்ற அமைப்பை துவக்கினார்.
இந்த அமைப்பு சார்பில், நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியில் பாவ்ன்ஸ் தெருவில், 'மகா வல்லப கணபதி' என்ற பிரமாண்ட கோவிலை கட்டினார். அமெரிக்காவில் முதன்முதலில் கட்டப்பட்ட இந்து கோவில்களில், இதற்கு முதன்மையான இடம் உண்டு.
இந்த பகுதியில் அதிகமாக வசித்த அமெரிக்கர்கள், கோவில் கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், கடும் எதிர்ப்பு, சவால்களை முறியடித்து, வெற்றிகரமாக இந்த கோவிலை கட்டினார். இதற்காக, இந்தியாவில் இருந்து, 150க்கும் மேற்பட்ட சிற்ப கலைஞர்களை அழைத்து வந்தார்.இதற்கு பின், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும், இதுவரை, 700க்கும் அதிகமான கோவில்களை கட்டி, பெரும் ஆன்மிக சேவை புரிந்துள்ளார்.அழகப்பா அழகப்பன், கடந்த மாதம் 24ல், உடல் நலக் குறைவு காரணமாக, அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் இறந்தார்.கடந்த 1998ல், சென்னைக்கு வந்திருந்த அழகப்பன், பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 'அமெரிக்காவில் வசிக்கும், இந்து மதத்தை சேர்ந்தவர்களின் வழிபாட்டுக்காக கோவில்கள் கட்ட வேண்டும் என்ற நம்பிக்கையின் காரணமாகவே, கோவில்களை கட்டி வருகிறேன். இதைத் தவிர, வேறு எந்த காரணமும் இல்லை' என, அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. |
|
|
|
|
|