Nagaratharonline.com
 
NEWS REPORT: இதய நோய் தீர்க்கும் ஸ்ரீஇருதயாலீஸ்வரர்  Dec 21, 14
 
பூசலார் நாயனார் மகேசனுக்கு ஆலயம் அமைக்க எண்ணினார். அவரிடம் பொருள் ஏது? ஆலயம் அமைப்பது என்ன அவ்வளவு எளிதான காரியமா? அடுத்த வேளை உணவுக்கே அடுத்தவரை அண்ட வேண்டிய நிலை! அவரால் எப்படி கோயில் கட்ட முடியும்?

ஓம் நமசிவாய… ஐந்தெழுத்து மந்திரத்தை இடைவிடாது சொல்லி வந்தார்.

இறைச் சிந்தனையை எந்நேரமும் மனத்தில் இருத்தும் வழி. பூசலாரும் கட்டினார் ஒரு கோயில். எங்கே? அவரின் மனத்துள்ளேதான்! இதோ கோயில் கட்டி முடித்தாயிற்று… குடமுழுக்கு நடத்த வேண்டும். அங்கே இறைவன் குடிகொள்ள வேண்டும். அதற்கான நாளை எதிர்பார்த்து இறைவனிடம் பிரார்த்தனை செய்தார் பூசலார்.

அதே நேரம்… காஞ்சியிலும் ஓர் ஆலயம் எழுந்து கொண்டிருந்தது. பல்லவ மன்னன் காடவர்கோன் ராஜசிம்மன் ஒவ்வொரு கணமும் கோயில் கட்டும் இடத்தைப் பார்வையிட்டான். பல்லவனின் படைபலத்தில், கோயிலுக்குத் தேவையான கற்கள் எங்கிருந்தெல்லாமோ கொண்டு வரப்பட்டன. தேர்ந்த சிற்பிகள் ஓய்வின்றி தூண்களையும் மண்டபங்களையும் சிற்பங்களையும் தயாராக்கி வந்தார்கள். உளிச்சத்தம் ஓயாது ஒலித்தது. இதோ கைலாசநாதனுக்கு ஒரு கற்கோயில். பல்லவனின் கற்பனை இதோ கண்முன் முழுவடிவாய் அழகுறத் திகழ்கிறது. இனி… குடமுழுக்கு வைபவம்தான் மீதி.

தேர்ந்த வேதியரை அழைத்தான் பல்லவன். குடமுழுக்கு நாள் குறித்தான். ஊரே விழாக்கோலம் பூண்டது. மறுநாள் விடிந்தால் கும்பாபிஷேக வைபவம். மனது நிறைந்திருக்க மஞ்சத்தில் கண் அயர்ந்தான் பல்லவன். அன்று இரவு…

கனவிலே வந்தார் கயிலைநாதன்.

“”மன்னா… நீ நாளை குடமுழுக்கு செய்யப்போகும் கோயிலுக்கு நான் வரப்போவதில்லை. நாளை திருநின்றவூரில் என் பக்தன் பூசலார் கட்டிய கோயிலில் குடமுழுக்கு நடத்தவிருக்கிறார். நான் அங்கே செல்ல வேண்டும். நீ வேண்டுமானால் குடமுழுக்கு தேதியை வேறொரு நாளுக்கு மாற்றிக் கொள்ளேன்… நான் வருகிறேன்!”

திடுக்கிட்டு எழுந்தான் மன்னன். கோயில் குடமுழுக்குப் பணியை நிறுத்த ஆணை பிறப்பித்த கையோடு திருநின்றவூருக்குக் கிளம்பிவிட்டான்… பூசலார் கட்டிய கோயிலைப் பார்ப்பதற்கு அதிகாலை நேரம் திருநின்றவூரை அடைந்தான்.

கட்டப்பட்ட கோயில் எங்கே? கும்பாபிஷேகம் ஏதும் நடக்கிறதா என்ன? அப்படி எதுவும் நடப்பதாகத் தெரியவில்லையே! ஆச்சரியம், அதிர்ச்சி, சோர்வு… எல்லாமும் சேர்ந்து கொள்ள, இறைவன் பொய் சொல்வாரா என்ன… ஏன் இப்படிச் சொன்னார் என்றெண்ணி விவசாயி ஒருவரிடம் விசாரித்தான்.

விவசாயி ஆச்சரியம் அடந்தான். “”தெரியாது… கோயில் கட்டவேண்டும் என்று ஏழை அந்தணர் பூசலார் எங்களிடம் சொல்லி வந்தார். அவர் இலுப்பை மரத்தடியில் பித்தர் போல் இருப்பார். போய்க் கேளுங்கள்” என்றான்.

பூசலாரைத் தேடிச் சென்றான் மன்னன். தியானத்தில் இருந்த பூசலாரைக் கண்டான். கற்கோயில் எழுப்பிய வேந்தனும் கற்பனைக் கோயில் எழுப்பிய வேதியனும் ஒருவரை ஒருவர் வணங்கினர். குடமுழுக்கு காண வந்தேன் என்று கூறி நடந்ததை விவரித்தான் மன்னன். கேட்டு அதிர்ந்தார் பூசலார்.

”கோயில் எங்கே?” என்று கேட்டான் மன்னன். “”என் இதயத்தில் கட்டி வைத்தேன்” என்றார் பூசலார். “”அடடா! இவர் மனக்கோயிலுக்கும் இறைவன் மதிப்பளித்தானே என்றால், அவர் பக்தி எப்படிப்பட்டது! வியந்த மன்னன் வீழ்ந்து வணங்கினான். பூசலாரின் விருப்பப்படி ஆலயம் எழுப்பினான். இதயத்துள் காட்சி தந்த ஈசனுக்கு இருதயாலீஸ்வரர் என்ற திருநாமம் அமைந்தது. அதன்பின்னே அவன் காஞ்சி சென்று, தான் அமைத்த கயிலாசநாதர் கோயிலுக்கு குடமுழுக்கு செய்வித்தான். திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் சந்நிதியின் சிறப்பு – இங்கே கருவறையில் ஈசன் லிங்கத் திருமேனி அருகே பூசலார் நாயனாரும் காட்சி தருகிறார் என்பதே!

இதய நோய் தீர…: இதயம் தொடர்பான நோய் உள்ளவர்கள், நோய் குணமாக திங்கட் கிழமைகளில் இங்கே வந்து பிரார்த்திக்கிறார்கள். இதயத்துக்கு இன்பம் தரும் இருதயாலீஸ்வரர் கோயிலில் மேலே இதய வடிவத்தில் சுவர் தெரிகிறது. நான்கு பிரிவுகளுடன் இதயக் கமலம் காட்சி தரும். இதய நோயாளிகள் இந்தக் கோயிலுக்கு வந்து இருதயாலீஸ்வரரை வழிபட்டால் போதும். இதய நோய் விலகிவிடும் என்கிறார்கள் பயன் பெற்றவர்கள்.

இருப்பிடம்: திருநின்றவூர். சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் திருநின்றவூர் ரயில்நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவு


source : dinamani