|
பழநி பாதயாத்திரை 400 ஆண்டுகால வரலாறு குறுந்தகடு காரைக்குடியில் வெளியீடு Jan 16, 15 |
|
தைப்பூசத் திருவிழாவையொட்டி பழநிக்கு செட்டிநாட்டுப் பகுதிகளி லிருந்து சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாக நகரத்தார் பாதயாத்திரை செல்லும் வரலாற்றை ஆவணப்படமாக்கியுள்ளனர். அதன் குறுந்தகடு காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) வெளியிடப்படுகிறது.
காரைக்குடி அருகே கோவிலூர் மடாலயத்தின் கலாஷேத்ரா பப்ளிகேஷன்ஸ் சார்பில் செட்டிநாட்டின் கலாசாரம், பாரம்பரியம் குறித்து ஆவணப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பழநிக்கு தைப்பூசமும் நகரத்தார் காவடிகளும் என்ற ஆவணப் பட குறுந்தகடு, கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் தலைமையில் கண்ணதாசன் மணிமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. குறுந்தகட்டை ராயவரம் மு.அ.மு. பழனியப்பச்செட்டியார் வெளியிடுகிறார். அதனை பழநி பாதயாத்திரையை வழிநடத்திச் செல்லும் குருமார்கள் பெற்றுக்கொள்கினறனர்.
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டாக்டர் எம். சொக்கலிங்கம் சிறப்புரையாற்றுகிறார். பாதரக்குடி ஆதீனம் ரவீந்திர சுவாமிகள், துளாவூர் ஆதீனம் நிரம்ப அழகிய சுவாமிகள், கவிஞர் செல்வகணபதி ஆகியோர் பேசுகின்றனர்.
இந்த ஆவணப்படம் குறித்து கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சே. குமரப்பன் கூறியதாவது:
பழநி பாதயாத்திரை 400 ஆண்டுகால வரலாறு கொண்டது. முதன்முதலில் நெற்குப்பையைச் சேர்ந்த குப்பாப்பிச்சன்செட்டி குமரப்பன் என்பவர்தான் 1590 ஆம் ஆண்டு பழநிக்கு பாதயாத்திரையை துவக்கினார். அவரே பழநிக்கு தனது மனைவி சிட்டாளுடன் முதல் காவடி எடுத்துச்சென்ற நகரத்தாரும் ஆவார். அதனால் குமரப்பனுக்கும், சிட்டாளுக்கும் பழநி அன்னதானமடத்தில் சிலைவைக்கப்பட்டுள்ளது. அவர் முதல் காவடி எடுத்துச்சென்றதால் இன்றைக்கும் நெற்குப்பையிலிருந்து குமரப்பன் பரம்பரையினர் ஆண்டுதோறும் எடுத்துவரும் காவடி கட்டளைக்காவடி அல்லது முத்திரைக்காவடி என்று அழைக்கப்படுவதோடு, சந்நிதானத்தின் முன்பாக வைத்து வழிபாடும் செய்யப்படுகிறது.
அதைத் தொடர்ந்து பழநி பாதயாத்திரை காவடிகள், பலநகரத்தார்கள் வாழும் பகுதிகளுக்கும் பரவி இன்றைக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்து பழநி பாதயாத்திரை மேற் கொண்டு வருகிறார்கள். பாதயாத்திரையின் போது பக்தர்கள் சிறப்பு வண்ண உடையணிந்து ஆடல், பாடல் முழக்கங்களுடன் நடந்து செல்வதும், பக்தர்களுக்கு வழி நெடுகிலும் உணவு, பாடல் புத்தகங்கள், மருந்து மாத்திரைகள் என ஜாதி பேதமின்றி வழங்கி, தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் பயணமாக பழநி பாதயாத்திரை திகழ்வது ஆவணப்படமாக்கப்பட்டுள்ளது என்றார். |
|
|
|
|
|