Nagaratharonline.com
 
கீழச்சிவல்பட்டியில் தமிழர் திருநாள் விழா  Jan 19, 15
 
கீழச்சிவல்பட்டி பாடுவார் முத்தப்பர் கோட்டத்தில் 59ஆவது தமிழர் திருநாள் விழா சனிக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை வரை நடைபெற்றது.

முதல் நாள் விழாவில் மொழியும் விழியும் என்ற தலைப்பில் கற்பகவள்ளியும், பெண்களும் பாரதியும் என்ற தலைப்பில் கே. ராமலெட்சுமியும், செயற்கரிய செயலார் சிறுதொண்டர் குன்றக்குடி பெருமாளும், காலை முதல் மாலை வரை என்ற தலைப்பில் சின்னத்திரை நடிகர் அப்பச்சிசபாபதியும் கருத்தரங்க உரை ஆற்றினர். தொடர்ந்து அரு. நாகப்பன் தலைமையில் மனித சமுதாயத்துக்கு துணை நிற்பது இளைஞர்களின் ஆற்றலா முதியவர்களின் அனுபவமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. 2 ஆம் நாள் விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு மகளிர் அரங்கம் குறித்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து என்னைச் செதுக்கிய இலக்கியம் என்ற தலைப்பில் பேராசிரியை திருவேணியும், நாட்டுப்புற இலக்கியம் என்ற தலைப்பில் செல்வி வைரமுத்துவும், குழந்தை இலக்கியம் என்ற தலைப்பில் முனைவர் தேவிநாச்சியப்பனும் பேசினர். தொடர்ந்து இறைவனின் அருளைப் பெற பெரிதும் தேவை பக்தியா, தொண்டா, சரணாகதியே, மனத்தூய்மையா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

3 ஆம் நாள் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்க விழாவுக்கு சொக்கலிங்கம், அழகுமணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கவிஞர் சிவல்புரி சிங்காரம் தலைமையில் தமிழ் இலக்கியத்தில் தடயம் என்ற தலைப்பில் வயி. நாராயணனும், அன்று சொன்னது அர்த்தமுள்ளது என்ற தலைப்பில் கவிஞர் பரதனும், தமிழாய் வாழ்வோம் என்ற தலைப்பில் ரா. சொக்கலிங்கமும் சிறப்புரையாற்றினர். மேலும் இவ்விழாக்களில் டாக்டர். பிச்சைக்குருக்கள், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ராம. சுப்புராம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தமிழ்மன்ற தந்தை ராம. சிவராமன், எஸ்.எம். பழனியப்பன், சுப. விஸ்வநாதன், ராம. வைரவன் ஆகியோர் செய்திருந்தனர்.