|
NEWS REPORT: பழநி முருகனுக்கு செலுத்தினாலும் வீடுவரை தொடரும் காவடி பயணம் : Report Feb 17, 15 |
|
ஏற்றிய காவடியை பழநி முருகனுக்கு செலுத்தினாலும், வீடு திரும்பும் வரை நடை பயணமாகவே திரும்ப கொண்டு வருகின்றனர் செட்டிநாட்டு நகரத்தார்கள்.
நகரத்தார்கள் வழிபடும் கோயில்கள் சிவன் கோயிலாக இருந்தாலும்,விரும்பி வழிபடும் தெய்வமாக முருகன் உள்ளார். தைப்பூச பழனி பாத யாத்திரை கடந்த 400 ஆண்டுகளாக நகரத்தாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவகோட்டை, நெற்குப்பை, மேலைசிவபுரி ஊர்களிலிருந்து வேல் எடுத்து செல்லப்பட்டு, வழி நெடுகிலும் ஆராதனை செய்யப்படுகிறது. இந்த வேல் முன்னே செல்ல, காவடி எடுத்து செல்வோர் பின் தொடர்வர்.
காரைக்குடி மீனாட்சி சுந்தரம் கூறும்போது: தைப்பூச திருவிழாவின், முன்தின அஷ்டமி அன்று நகரத்தார் காவடி கிளம்புவார்கள். ஆறுநாள் நடைபயணம். அதன்படி தைப்பூசத்தின் முதல்நாள் அன்னதான மடத்தை அடைவார்கள். அதற்கு அடுத்த நாள் ஆயில்யம். அடுத்த நாள் மகம். அன்று காவடி செலுத்துவார்கள். அதன்பிறகு இரண்டு நாள் அங்கு தங்கியிருந்து, அபிஷேகத்தில் பங்கேற்பார்கள். அதற்கு அடுத்தநாள் கிளம்பி, மூன்று நாளில் குன்றக்குடிக்கு வருவார்கள்.ஒரு முறை காவடியை தூக்கினால், அடுத்து பூஜை நடக்கும் இடத்தில் மட்டுமே கீழே வைக்க வேண்டும். கீழே வைக்கும் வரை தண்ணீர் குடிக்க கூடாது. தீபாராதனை காட்டிய பிறகே தண்ணீரோ, உணவோ சாப்பிட வேண்டும். காவடியை, நீராடிய பிறகே தூக்க வேண்டும். காவடி செலுத்த நேர்ந்து கொண்டால்,பாத யாத்திரை பயணம் முடிக்க, அவருக்கு குறைந்தது 20 நாட்களாகும். இங்கிருந்து பழநி சென்று அங்கிருந்து சொந்த ஊர் வரை என, மொத்தம் 308 கி.மீ.,இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.கடந்த பிப்.5-ம் தேதி காவடி செலுத்தப்பட்டது. அங்கிருந்து 8-ம் தேதி கிளம்பி கடந்த 14-ம் தேதி பாதயாத்திரையாகவே ஊர் வந்து சேர்ந்தோம், என்றார். |
|
|
|
|
|