Nagaratharonline.com
 
NEWS REPORT: நாட்டரசன்கோட்டையில் வீட்டுக் கதவை உடைத்து 35 பவுன் நகை திருட்டு  Mar 4, 15
 
நாட்டரசன்கோட்டையில் வீட்டுக் கதவை உடைத்து 35 பவுன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை 6ஆவது வார்டு பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் சிவராமன் (58). இவர், தஞ்சாவூர் அருகே உள்ள திருவலம்பொழில் என்ற ஊரில் வட்டிக் கடை நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் பிப். 28ஆம் தேதி தஞ்சாவூர் சென்றுள்ளார். பின்னர் புதன்கிழமை வீட்டுக்கு சிவராமன் குடும்பத்தினர் திரும்பினர். அப்போது, வீட்டுக் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே பெட்டகத்தில் வைத்திருந்த 25 பவுன் நகை, 3 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடு போயிருந்தன. மேலும் மற்றொரு அறையில் பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவையும் திருடப்பட்டிருந்தன. வீட்டு மாடியில் கட்டடப் பராமரிப்பு பணிகளுக்காக கட்டப்பட்டிருந்த சாரத்தில் ஏறி மாடிப்படி வழியாக வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஷ்வின் முகுந்த் கோட்னீஸ் சம்பவ இடத்தை பார்வையிட்டார். தடயவியல் துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் பரமசிவம் தலைமையில் போலீஸார் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் லைக்கா வரவழைக்கப்பட்டது. அது அருகிலுள்ள குளக்கரை வரை ஓடி நின்று விட்டது. இந்த திருட்டு குறித்து சிவகங்கை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்