Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டியில் 1008 கலசாபிஷேக விழா தொடக்கம்  Mar 11, 15
 
பிள்ளையார்பட்டியில் உலக நன்மை வேண்டி 15 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை 1008 கலசாபிஷேக விழா தொடங்கியது.

குடவரை கோயிலான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் உலக நன்மை கருதி 1008 கலசாபிஷேக விழா தொடங்கியது. கிழக்கு கோபுர வாயிலின் எதிரே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான பந்தலில் நடைபெறும் இவ்விழாவில், வேதவிற்பன்னர்கள், சிவாச்சாரியார்கள், திருமுறையார்கள், நாதஸ்வர, மேள இசைக்கலைஞர்கள், பங்கேற்று வருகின்றனர். திங்கள்கிழமை காலை 7 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்கி 10 மணிக்கு வாஸ்துசாந்தி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு மிருத்சங்கிரஹனம், அதனைத் தொடர்ந்து அங்குரார்ப்பணம், ரக்ஷபந்தனம் ஆகியவற்றைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு பிராதன கலச ஸ்தாபனம், நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து முதல்கால பூஜையும், இரவு 8.15 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனையும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு 2 ஆம் கால யாக பூஜையும், பூர்ணாகுதி தீபாராதனையும் அன்று மாலை 6.30 மணிக்கு 3 ஆம் கால யாகபூஜையும், பூர்ணாகுதியும் நடைபெறும். பின்னர் 3 ஆம் நாளான புதன்கிழமை காலை 9.05 மணிக்கு நான்காம் கால யாகபூஜை மற்றும் பூர்ணாகுதி தீபாராதனையும், மாலை 5 கால யாகபூஜையும் நடைபெறும். தொடர்ந்து வியாழக்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு 6 ஆம் கால யாகபூஜையும், 7.45 மணிக்கு பூர்ணாகுதியும், 8 மணிக்கு கடம் புறப்பாடு நிகழ்ச்சியும், 9 மணிக்கு ஸ்ரீகற்பக பெருமாளுக்கு கலசாபிஷேக தீபாராதனையும் நடைபெற உள்ளது.

தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஸ்ரீகற்பக பெருமாள், சண்டிகேஸ்வரருடன் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீகற்பக விநாயகர் கோயில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி அரு.நாராயணன் செட்டியார், காரைக்குடி வீர.முத்துக்கருப்பன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.