|
தேவகோட்டை நகராட்சி குப்பை பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுமா? Feb 24, 10 |
|
தேவகோட்டை, பிப். 23: தேவகோட்டை நகராட்சிக் குப்பைகளைக் கொட்டுவதற்கு நிரந்தர இடம் ஒதுக்காததால் அன்றாடம் சேரும் குப்பைகளைக் கொட்டுவதில் பெரும் சிக்கல் நீடித்துவருகிறது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 2-வது பெரிய நகராட்சி இது. சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கும் இங்கு தினசரி டன் கணக்கில் குப்பைகள் சேருகின்றன.
ஆனால் தேவகோட்டை நகராட்சிக்கென தனியாக சொந்தமாக குப்பை கொட்டும் இடம் இதுவரை இல்லை. பல வருடங்களாக இந்நகராட்சிக் குப்பைகள் அனுமந்தக்குடி செல்லும் வழியில் உள்ள விருசுழி ஆற்றங்கரையில் கொட்டப்பட்டு வந்தன.
இங்கு இடம் போதாமல் போகவே, காரைக்குடி நகராட்சிக் குப்பைகள் கொட்டப்படும் ரயில்வே ஸ்டேஷன் அருகில் குப்பைகளைக் கொட்டி வந்தனர்.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை மறித்து போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து காரைக்குடி நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இங்கு குப்பைகளை கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஏற்கெனவே பல ஆண்டுகாலமாக கொட்டப்பட்டு வந்த விருசுழி ஆற்றங்கரையில் மீண்டும் தேவகோட்டை நகராட்சிக் குப்பைகளைக் கொட்ட முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு சித்தானூர் ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து திருவாடானை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆர்.ராமசாமி, நகர்மன்றப் பிரதிநிதகள் மற்றும் அதிகாரிகளை அழைத்துப் பேசி, தாற்காலிகமாக ஆற்றின் மேற்குப் பகுதியில் குப்பைகளைக் கொட்ட ஏற்பாடு செய்தார்.
ஆனால் அங்கும் நீண்டநாள் குப்பைகளைக் கொட்ட முடியவில்லை. இதனிடையே சருகனி அருகேயுள்ள தனியாருக்குச் சொந்தமான கிராவல் குவாரி ஒன்றை விலைக்கு வாங்கி அங்கு குப்பைகளைக் கொட்டலாம் என முடிவெடுத்து, அந்த உரிமையாளரின் ஒப்புதலுடன் தாற்காலிகமாக அங்கு குப்பைகளைக் கொட்டி வந்தனர்.
ஆனால் அங்கு கொட்டுவதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அப்பகுதியைச் சேர்ந்த சருகனி, பொன்னலிக்கோட்டை, இளங்குடி, வீரை, சிறுவெத்தி, வெள்ளிக்கட்டி உள்ளிட்ட ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் இங்கு குப்பைகளை கொட்டினால் தங்களுக்கு வரும் குடிநீர் மாசுபடும் எனவும், விவசாயம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு வாரத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்தாவிடில் சாலை மறியலில் ஈடுபடுவோம் எனக் கூறி, தொடர்ந்து இரு தினங்கள் குப்பை கொண்டு வந்த லாரிகளை மறித்தனர்.
இதுகுறித்து ஊராட்சித் தலைவர்கள், நகர்மன்றத் தலைவர், அதிகாரிகளை அழைத்து கோட்டாட்சியர் அண்ணாத்துரை பேசினார்.
இதில் ஊர் மக்கள் பிடிவாதமாக இருக்கவே, குப்பை கொட்டுவதை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களாக தேவகோட்டை நகராட்சியில் குப்பைகள் கொட்ட இடமின்றி லாரிகளிலேயே தேங்கியுள்ளன.
ஆற்றங்கரையில் சருகனி செல்லும் பாதையில் நகராட்சிக்கென ஓர் ஏக்கர் இடம் உள்ளது. அங்கு குப்பைகளை கொட்டுவதற்கு இடம் ஒதுக்குவது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
எனவே, அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு தேவகோட்டை நகராட்சி குப்பை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
Source:Dinamani-Feb 24 |
|
|
|
|
|