Nagaratharonline.com
 
பள்ளியில் தேர்வுகள் நடப்பதால் திருப்பதி கோவிலில் கூட்டம் குறைந்துள்ளது.  Mar 11, 15
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. பள்ளியில் தேர்வுகள் நடப்பதால் திருப்பதி கோவிலில் கூட்டம் குறைந்துள்ளது.

நேற்று அதிகாலை முதல் மாலை 6 மணி வரை 43 ஆயிரத்து 446 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்ததால் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்தனர். கால்நடையாக நடந்து செல்லும் பக்தர்கள் 1½ மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்தனர். 300 ரூபாய் கட்டணத்தில் சென்ற பக்தர்கள் நேராக சென்று காத்திருக்காமல் சாமி தரிசனம் செய்தனர்.

வழக்கமாக திருப்பதியில் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் மெகா லகுதரிசனம் என்ற தரிசனமுறை கடைபிடிக்கப்படும். இதன்படி தூரத்தில் நின்றபடியே ஒரு வினாடி மட்டுமே ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும்.

நேற்று கூட்டம் குறைவாக இருந்ததால் லகுதரிசனம் முறை கடைபிடிக்கப்பட்டது. இதன்படி பக்தர்கள் ஏழுமலையான் அருகில் உள்ள ராகுலமேடை வரை சென்று தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இதன்மூலம் பக்தர்கள் ஏழுமலையானின் மிக அருகில் சென்று தரிசனம் செய்தனர்.