Nagaratharonline.com
 
NEWS REPORT: மழை தரும் மன்மத வருடம்… செல்வவளம் பெருகும்!  Mar 11, 15
 
உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் வருடப் பிறப்பு கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில் ஆண்டுகள் எண்களின் அடிப்படையில் தான் அறியப்படுகிறது. ஆனால் தமிழில் மட்டுமே ஆண்டுகளுக்கு பெயர்கள் வழங்கப்படுகிறது. தமிழில் மொத்தம் அறுபது ஆண்டுகள் உண்டு. சூரியன் மேஷம் ராசியில் நுழைவதை தமிழ் வருடப் பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆங்கில தேதியில் சுமார் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் வருடப் பிறப்பு நிகழும்.

இவ்வாண்டு 14-04-2015 செவ்வாய் கிழமை அன்று தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இவ்வாண்டு பிறக்கும் தமிழ் ஆண்டானது தமிழ் ஆண்டுகளின் வரிசையில் இருபத்து ஒன்பதாவது வருடம் ஆகும். இப்புத்தாண்டின் பெயர் மன்மத வருடம் ஆகும். ஒவ்வொரு தமிழ் வருடத்திற்கும் இடைக்காட்டுச் சித்தர் எழுதிய பாடல்களைக் கொண்டு அந்த வருடத்தின் பலன் அறியப்படுகிறது.

மன்மத வருடத்திய வெண்பா ;
மன்மதத்தின் மாரியுண்டு வாழமுயிரெல்லாமே
நன்மைமிகும் பல்பொருளும் நண்ணுமே -
மன்னவரால் சீனத்திற் சண்டையுண்டு தென் திசையிற் காற்றுமிகும் கானப்பொருள் குறையுங் காண்

இதன் பொருள் என்னவென்றால் மன்மத வருடத்தில் நல்ல மழையுண்டு. எல்லா உயிரினங்களும் நன்றாக சுகமாக வாழும். நன்மைகள் அதிகரிக்கும். எல்லாவிதமான பொருட்களின் உற்பத்தியும் அதிகரிக்கும் மேலும் அவை எளிதாகக் கிடைக்கப் பெறும். சீனாவில் அரசாளும் அதிகார வர்க்கத்தினரால் சண்டை சச்சரவு உண்டாகும். தெற்கு திசையிலிருந்து அதிகமாக காற்றடித்து காட்டுப் பயிர்களின் விளைச்சல் குறையும். மன்மத வருடப் பிறப்பன்று உள்ள கிரக நிலை பின்வருமாறு: மன்மத வருடம் சித்திரை மாதம் ஒன்றாம் தேதி - 14-04-2015 செவ்வாய் கிழமை கிருஷ்ணபட்சம் தேய்பிறை தசமி திதி, அவிட்டம் நட்சத்திரம் சுபம் நாமயோகம் பத்திரை கரணம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் பகல் 01-47 மணியளவில் சிம்மம் லக்கினத்தில் மன்மத வருடம் பிறக்கிறது.