Nagaratharonline.com
 
மார்ச் 25இல் குன்றக்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்  Mar 16, 15
 
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா, மார்ச் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றம் மார்ச் 25ஆம் தேதி காலை 5 மணி முதல் 5.45 மணிக்குள் நடைபெறுகிறது. அதையொட்டி நாள்தோறும் சண்முகநாதப் பெருமான் வெள்ளிக்கேடகத்தில் உலா வருதல் நடைபெறுகிறது.

மார்ச் 29ஆம் தேதி வள்ளி நாயகி திருமண வைபவமும், மார்ச் 31ஆம் தேதி இரவு தங்க ரதத்தில் சுவாமி எழுந்தருளும் திருவீதியுலாவும், ஏப்ரல் 1ஆம் தேதி வையாபுரியில் தெப்பமும், வெள்ளி ரதத்தில் சுவாமி எழுந்தருளும் திருவீதியுலாவும் நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பங்குனி உத்திரத் தேரோட்டம் ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. அதையொட்டி காலை 5.30 மணிக்கு தேருக்கு சுவாமி எழுந்தருளலும், மாலை 4 மணிக்கு தேரோட்டமும், இரவு சுவாமி திருவீதியுலாவும் நடைபெறுகிறது.

ஏப்ரல் 3ஆம் தேதி பகலில் உத்திரம் தீர்த்த விழாவும், இரவு மயிலாடும்பாறைக்கு சுவாமி எழுந்தருளலுடன் திருவிழா நிறைவடைகிறது. விழாவை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முன்னின்று நடத்துகிறார்.