Nagaratharonline.com
 
காரைக்குடி நகரத்தார் வீட்டில் வைர மோதிரங்கள்–நகைகள் திருட்டு: வாலிபருக்கு வலைவீச்சு  Mar 20, 15
 
காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல் வீதியை சேர்ந்தவர் மீனாட்சி ஆச்சி (வயது 80). இவரது கணவர் முத்துராமன் செட்டியார். இவர் இறந்து விட்டார்.

இதனால் மீனாட்சி ஆச்சி நகரத்தாருக்கே உரிய பெரிய வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது மகன் ராமசாமி காரைக்குடியில் மற்றொரு பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 10–ந்தேதி மீனாட்சி ஆச்சி வீட்டுக்கு 42 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் வந்து ஆதார் அட்டையை கேட்டு அது தொடர்பாக விசாரித்து விட்டு சென்றார். அதன்பின்னர் கடந்த 16–ந் தேதி மீனாட்சி ஆச்சி, வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது 15 வைரக்கற்கள் பதித்த மோதிரமும், 20 வைரக்கற்கள் பதித்த மோதிரமும், 7 வைரக்கற்கள் பதித்த மோதிரமும் மாயமாகி இருந்தது.

இவற்றுடன் 2½ பவுன் பிரேஸ்லெட்டும், 3ž பவுன் செயின் மற்றும் ரூ. 60 ஆயிரம் ரொக்கம் ஆகியவையும் திருடு போயிருந்தது தெரியவந்தது. நகைகளின் மதிப்பு ரூ. 3 லட்சம் ஆகும்.

இதுகுறித்து ராமசாமி, அளித்த புகாரின் பேரில் காரைக்குடி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஆதார் அட்டை கேட்டு விசாரித்த மர்ம வாலிபர் மோதிரம், பணத்தை திருடியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த வாலிபரையும் தேடி வருகிறார்கள்.