Nagaratharonline.com
 
NEWS REPORT: தலைக் கவசம்...... சில சந்தேகங்கள்...?  Jun 24, 15
 
இரு சக்கர வாகன ஓட்டுநர்களும், பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தலைக்கவசம் அணிவது அவசியம் என்ற அறிவிப்பு அனைவரையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஜூலை 1 முதல் இருசக்கர வாகன ஓட்டுநர்களும், அவருடன் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தலைக்கவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, தலைக்கவசம் அணியாதவர்களின் வாகன ஓட்டுநர் உரிமம், வாகன உரிமப் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனில், வாகன ஓட்டிகள் ஐஎஸ்ஐ முத்திரையுடன் கூடிய தலைக்கவசம், அதற்கான ரசீதை கொண்டு வந்து காட்டி ஆவணங்ளைப் பெற்றுச் செல்லலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தலைக்கவச அறிவிப்பு அனைத்துத் தரப்பினரின் அதிருப்தியை சந்தித்துள்ளது என்பதே உண்மை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதுகுறித்து வழக்குரைஞர்கள் சிலர் கூறியதாவது:
தலைக்கவசம் அணியவில்லை என்றால் மோட்டார் வாகனச் சட்டப்படி அபராதம் மட்டுமே விதிக்க முடியும். வாகனத்தையோ, ஓட்டுநர் உரிமத்தையோ பறிமுதல் செய்யவோ, ரத்து செய்யவோ முடியாது. இதைவிடுத்து, வாகனங்களைப் பறிமுதல் செய்வோம் என மிரட்டுவது தவறானது என்றனர்.

பள்ளிக் குழந்தைகளுக்கு எப்படி தலைக்கவசம் அணிவிப்பது?
பள்ளிகளில் குழந்தைகளை அனுப்பச் செல்லும்போது, அவர்களுக்கு எப்படி தலைக்கவசம் அணிவிப்பது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயம். அதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாது. ஆனால் பின்னால் அமர்ந்திருப்பவரும் அணிய வேண்டும் என்பது மக்களை நெருக்கடிக்கு ஆளாக்கும் செயலாகும்.
ஒருவர் தங்களது இரு பிள்ளைகளை பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது தினசரி அவசரத்தில் அவர்களுக்கு தலைக்கவசம் அணிவித்து, பின்னர் அதை பத்திரமாக வாகனத்தில் தொங்க விடுதல், அல்லது பள்ளியில் பிள்ளைகள் அதைப் பாதுகாத்தல் போன்ற பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஆகையால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.
இரண்டு தலைக்கவசத்தையும் எடுத்துச் செல்ல முடியுமா?
வாகன ஓட்டிகள் தலைக் கவசம் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியானது.
ஆனால் பின்னால் அமருபவர்கள் அணிய வேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியமற்றது.

Article from DInamani.