|
B,E., 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஓர் இடம்கூட தேர்வு செய்யப்படவில்லை Jul 12, 15 |
|
பொறியியல் கலந்தாய்வு தொடங்கி 10 நாள்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், 50-க்கும் மேற்பட்ட சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஒன்றுகூட தேர்வு செய்யப்படவில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது.
முன்னணிக் கல்லூரிகளில் மட்டுமே இடங்கள் முழுமையாக நிரம்பியிருப்பதாகவும், இரண்டாம் நிலைக் கல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் ஒற்றை இலக்கத்திலேயே இடங்கள் நிரம்பியிருப்பதாகவும், மூன்றாம் நிலைக் கல்லூரிகளில் ஒரு இடம் கூட தேர்வு செய்யப்படவில்லை எனவும் சென்னை அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலைவாய்ப்புகள் அரிதாகி வரும் காரணத்தால் பொறியியல் படிப்புகள் மீதான மோகம் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களிடையே ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.
இது நிகழ் கல்வியாண்டிலும் தொடர்கிறது. கடந்த ஆண்டு 2.13 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகமாகியிருந்த நிலையில், இம்முறை 1.90 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே விநியோகமாகின.
மேலும், கடந்த ஆண்டில் 1.75 லட்சம் பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர். நிகழாண்டில் 1.49 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்தனர்.
இதுபோல, பொறியியல் படிப்பில் சேருபவர்களின் எண்ணிக்கையும் இம்முறை வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது.
கலந்தாய்வு தொடங்கி வெள்ளிக்கிழமையோடு 10 நாள்கள் முடிந்துள்ள நிலையில், 10 ஆயிரத்து 193 பேர் கலந்தாய்வில் பங்கேற்பதையே தவிர்த்துள்ளனர். 168 பேர் கலந்தாய்வில் பங்கேற்றபோதும் இடங்களைத் தேர்வு செய்யவில்லை.
அழைக்கப்பட்ட 46 ஆயிரத்து 219 பேரில், 35 ஆயிரத்து 858 பேர் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.
அதுவும், முன்னணி கல்லூரிகளில் உள்ள இடங்கள் மட்டுமே முழுமையாக நிரம்பியிருக்கின்றன.
கலந்தாய்வு முடிய இன்னும் 20 நாள்களே உள்ள நிலையில், இரண்டாம் நிலைக் கல்லூரிகள் பெரும்பாலானவற்றில் ஒற்றை இலக்கத்திலேயே சேர்க்கை நடைபெற்றிருப்பதாகவும், மூன்றாம் நிலைக் கல்லூரிகளில் ஒரு இடம்கூட நிரம்பவில்லை என்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள சுயநிதி கல்லூரி ஒன்றில், கலந்தாய்வுக்கு ஒப்படைக்கப்பட்ட 210 மெக்கானிக்கல் இடங்கள், 103 இசிஇ இடங்கள் மட்டுமின்றி மீதமுள்ள படிப்புகளிலும் ஒரு இடத்தைக்கூட இதுவரை மாணவர்கள் தேர்வு செய்யவில்லை.
சென்னையை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் கலந்தாய்வுக்கு ஒப்படைக்கப்பட்ட 141 மெக்கானிக்கல் இடங்கள், 105 இசிஇ இடங்கள், 105 சிஎஸ்இ இடங்கள், 52 சிவில் இடங்கள், 52 இஇஇ இடங்கள், 40 ஐடி இடங்கள் அப்படியே இருக்கின்றன. |
|
|
|
|
|