|
NEWS REPORT: பள்ளி வாகனம் மரத்தில் மோதியதில் ஓட்டுநர் சாவு; 25 குழந்தைகள் பலத்த காயம் Jul 14, 15 |
|
திருப்பத்தூர் அருகே சோழம்பட்டி விலக்குப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த தனியார் பள்ளி வாகனம் செவ்வாய்க்கிழமை மரத்தில் மோதியதில் ஓட்டுநர் உயிரிழந்தார். மேலும், 25 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
திருப்பத்தூர் அருகே மானகிரியில் உள்ள தனியார் பள்ளி வாகனம் செவ்வாய்க்கிழமை மாலை மாணவர்களை இறக்கிவிடுவதற்காக திருப்பத்தூர் வழியாக சிங்கம்புணரி சென்றது. அப்போது, திருப்பத்தூரிலிருந்து சிறிது தொலைவில் உள்ள சோழம்பட்டி விலக்குப் பகுதியில் இந்தப் பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மரத்தில் மோதியது.
இதில், வாகன ஓட்டுநரான சிங்கம்புணரியைச் சேர்ந்த ரெத்தினகுமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பள்ளிக் குழந்தைகள் 25 பேர் பலத்த காயமடைந்தனர். உடனே, அப்பகுதியினர் விரைந்து வந்து மரத்தில் மோதி சிக்கியிருந்த வாகனத்திலிருந்து குழந்தைகளை மீட்டனர். பின்னர் வந்த தீயணைப்புப் படை வீரர்கள், இடிபாடுகளில் சிக்கி இறந்து கிடந்த ஓட்டுநர் ரெத்தினகுமாரை வெளியே கொண்டு வந்தனர்.
குழந்தைகள் அனைவரும் மீட்கப்பட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லபட்டனர். பின்னர், அங்கிருந்து மதுரை மற்றும் மானகிரி அப்போலோ மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்துக்கு காரணம்: பள்ளி வாகனத்தில் குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் பெண் வராத காரணத்தினால், குழந்தைகள் ஆட்டம் பாட்டத்துடன் இருந்துள்ளனர். இதை, ஓட்டுநர் திரும்பித் திரும்பி பார்த்த வண்ணம் வாகனத்தைச் செலுத்தியுள்ளார். திடீரென வளைவில் அவரால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், மரத்தில் மோதியதாக அதில் பயணித்த சிறுவன் ஒருவன் கூறினான். |
|
|
|
|
|