Nagaratharonline.com
 
Dr. அப்துல் கலாம் நல்லடக்கம் செய்யப்பட்ட ‘பேக்கரும்பு’ பெயர் காரணம்  Jul 31, 15
 
அப்துல் கலாம் நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் ராமேசுவரத்தையொட்டிய பேக்கரும்பு என்கிற இடமாகும். இந்த பேக்கரும்பு பெயர் காரணம் குறித்து, ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனர் வே.ராஜகுரு கூறியதாவது:

ராமேசுவரம் தீவில் வேளாண் தொழில் செய்வதற்கு கலப்பையைப் பயன்படுத்துவது இல்லை. ராமரின் பாதங்கள் பட்ட புண்ணிய பூமியில், ஏர் பூட்டி உழும் தொழில் செய்யக் கூடாது. மீறி செய்தால் லிங்கம் முளைக்கும் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணமாகும்.

ராமேசுவரம் அருகே 4 கி.மீ தொலைவில் பஞ்ச கல்யாணி ஆற்றையொட்டி எருவை என்ற செடியினத்தின் ஒருவகை புல் வளர்கிறது. நாணல் செடி போல வளரும் இது துளை உடைய செடி இனமாகும். இந்த புல் கரும்பைப் போல காணப்பட்டதால் ‘பேக்கரும்பு’ (பே-என்றால் இல்லை என்று பொருள்) என்று அழைக்கப்பட்டது. பின்னர் இப்பகுதியில் குடியிருப்புகள் உண்டான பிறகு, மக்கள் அந்த பகுதியையே ‘பேக்கரும்பு’ என்று அழைத்ததாக கூறினார்.