Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வலியுறுத்தல்  Aug 5, 15
 
பொன்னமராவதியில் நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என நகர காங்கிரஸ் தலைவர் எஸ். பழனியப்பன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

பொன்னமராவதி பேரூராட்சிக்குள்பட்ட புதுவளவு பகுதியிலிருந்து பேருந்து நிலையம் வரையுள்ள அண்ணாசாலையின் இருபுறமும் ரூ. 1 கோடியில் மழைநீர் வடிகால் கட்டும் பணி பேரூராட்சி மூலம் நடைபெற உள்ளது. இப்பணிக்காக சாலையின் இரு ஒரங்களிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி ஜூலை 31-ல் நெடுஞ்சாலைத் துறை, பேரூராட்சி மூலம் நடைபெற்றது.

ஆனால் ஆக்கிரமிப்பு இல்லாத இடங்களில் மூடு சிலாப்புகளை உடைத்தும், பல இடங்களில் ஆக்கிரமித்துள்ள கட்டடங்களை அகற்றாமலும், வரைபடப்படி முறையாக அளக்காமலும் இப்பணி நடைபெற்றுள்ளது. நெடுஞ்சாலைத்துறை சாலையின் அத்துவரை சரிவர அளந்து அகற்றி, மழைநீர் வடிகால் கால்வாயை தேவைக்கேற்ப அகலமாகவும், ஆழமாகவும் அமைத்தால்தான் மழைநீர் வடிவதுடன், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சாலை அகலமாக அமையும்.

வெறும் கண்துடைப்புக்காக கால்வாய் அமைத்தால் மக்களின் வரிப்பணம் ரூ. 1 கோடி வீணாகிவிடும். எனவே வருவாய்த் துறை உதவியுடன் அளந்து அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி அகற்றிவிட்டு, பேரூராட்சி வடிகால் அமைக்கப்பட வேண்டும்.