|
சிற்பக் கலைஞர்கள் கௌரவிக்கப்படுவார்கள்: கோவிலூர் ஆதீனம் அறிவிப்பு Sep 28, 15 |
|
கல் சிற்பம், பஞ்சலோகச் சிற்பம், தேர் வாகனச் சிற்பம் போன்ற துறைகளைச் சேர்ந்த கலைஞர்கள் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவிக்கப்படுவார்கள் என்று கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் தெரிவித்தார்.
காரைக்குடி அருகே கோவிலூர் ஆதீனத்தில் நாச்சியப்ப சுவாமிகளின் 4ஆவது குருபூஜை விழா சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. தொடக்க விழாவில் ஊரன் அடிகள் சிறப்புரையாற்றினார். அப்போது சாகித்ய அகாதெமியின் பாலபுரஷ்கார் விருது பெற்ற கவிஞர் செல்லகணபதி பாராட்டப்பட்டார். பின்னர் தமிழண்ணல் பேசுகையில், தமிழர்களின் மரபுக் கலைகளை வளர்த்த பெருமை கோவிலூர் மடாலயத்தையே சாரும். இன்றைக்கு மரபுக் கலைகள் நசிந்து வருகின்றன. இக்கலைகளை ஊக்கப்படுத்தும் விதமாக கோவிலூர் மடாலயம் ஆண்டுதோறும் நடைபெறும் குருபூஜை விழாவில் மரபுக்கலை கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவப்படுத்த வேண்டும் என்றார்.
விழாவில் கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் பேசுகையில், தமிழண்ணலின் கோரிக்கையை ஏற்று நாதஸ்வரம், தவில், கல் சிற்பம், பஞ்சலோகச்சிற்பம், தேர் வாகனச் சிற்பம், திருமுறை ஆகிய துறைகளில் தமிழகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு அடுத்த ஆண்டிலிருந்து நாச்சியப்ப சுவாமிகள் குருபூஜை விழாவில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்றார். |
|
|
|
|
|