Nagaratharonline.com
 
ரயில் முன்பதிவு டிக்கெட் ரத்து: பிடித்தம் இரு மடங்கு உயர்வு; நவ.12-இல் அமல்  Nov 6, 15
 
ரயில் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்யும்போது, பிடித்தம் செய்யப்படும் தொகையை, ரயில்வே இரு மடங்கு உயர்த்தியுள்ளது. மேலும், புதிய விதிமுறையின்படி ரயில் புறப்படுவதற்கு 4 மணிநேரத்துக்கு முன்புவரை ரத்து செய்தால் மட்டுமே பணத்தை திரும்பப் பெற முடியும்.
இதுதொடர்பாக ரயில்வே துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வரும் 12ஆம் தேதி அமல்படுத்தப்பட உள்ள இந்த புதிய விதிமுறைகளின்படி, ரயில் புறப்பட்ட பின் டிக்கெட்டை ரத்து செய்தால் பணம் திருப்பியளிக்கப்படமாட்டாது. மேலும், ரயில் புறப்படுவதற்கு 4 மணிநேரம் முன்பாக ரத்து செய்தால் மட்டுமே பணம் திருப்பியளிக்கப்படும்.
ரயில் புறப்படுவதற்கு 48 மணிநேரத்துக்கு முன் டிக்கெட்டை ரத்து செய்யும்போது, இரண்டாம் வகுப்பு இருக்கை உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுக்கு பிடித்தம் செய்யப்படும் தொகை ரூ.60-ஆக உயர்த்தப்பட உள்ளது. தற்போது, ரூ.30 வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல, மூன்றடுக்கு ஏசி பெட்டிகளுக்கான டிக்கெட்டுக்கு தற்போது பிடித்தம் செய்யப்படும் தொகை ரூ.90-இல் இருந்து ரூ.180-ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு இத்தொகை ரூ.60-இல் இருந்து ரூ.120-ஆகவும், இரண்டடுக்கு ஏசி பெட்டிகளுக்கு ரூ.100-இல் இருந்து ரூ.200-ஆகவும் அதிகரிக்கப்பட உள்ளது.
காத்திருப்பு பட்டியல், ஆர்ஏசி டிக்கெட்டுகளை பொருத்தவரை, ரயில் புறப்படுவதற்கு அரை மணிநேரம் முன்பாக ரத்து செய்தால் மட்டுமே பணம் திருப்பியளிக்கப்படும். அதன்பிறகு, ரத்து செய்தால் பணம் திருப்பியளிக்கப்படமாட்டாது.
ரயில் புறப்படுவதற்கு 48 மணிநேரத்தில் இருந்து 6 மணி நேரத்துக்கு முன்பாக டிக்கெட்டை ரத்து செய்யும்போது, டிக்கெட்டின் 25 சதவீத தொகை தற்போது வசூலிக்கப்படுகிறது. புதிய விதிமுறைகளின்படி, 6 மணிநேரம் என்பது 12 மணிநேரமாக மாற்றியமைக்கப்பட உள்ளது.
ரயில் புறப்படுவதற்கு 6 மணி நேரத்தில் இருந்து ரயில் புறப்பட்ட 2 மணிநேரத்துக்குள் டிக்கெட்டை ரத்து செய்யும்போது, டிக்கெட்டின் 50 சதவீத தொகை தற்போது பிடித்தம் செய்யப்படுகிறது.
இனி, ரயில் புறப்படுவதற்கு 4 மணிநேரத்துக்கு முன்பாக ரத்து செய்தால் மட்டுமே 50 சதவீத பணம் திருப்பியளிக்கப்படும். அதன்பிறகு ரத்து செய்தால் பணம் திருப்பியளிக்கப்படமாட்டாது என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.