|
NEWS REPORT: புதுக்கோட்டை ஆத்தா அப்பச்சி மாநாடு : தமிழை வளர்த்ததில் நகரத்தாரின் பங்களிப்பு அதிகம் Dec 26, 15 |
|
புதுக்கோட்டை நகரத்தார் சங்கம், நகரத்தார் இளைஞர்,மகளிர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை அருகேயுள்ள ஜெ.ஜெ. கல்லூரி வளாகத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ். ரகுபதி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற நகரத்தார் மாநாட்டைத் தொடக்கிவைத்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லெட்சுமணன் பேசியது:
நகரத்தார்களுக்கு என்று நான் ஒரு வங்கி தொடங்க முடிவு செய்துள்ளேன். இதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நகரத்தார் சமூகத்தின் ஜனத்தொகை குறைவானதுதான் எனினும், ஆலயம், ஆன்மிகம் பொதுப்பணிகளை ஆற்றியவர்கள் அதிகம். நமது சமுதாய இளைஞர்கள் உயர் கல்வியில் சிறந்து விளங்குவதால், நாம் முன்னேறிய சமூகமாக மாறிவருகிறோம். அதேநேரத்தில் நம்மிடையே ஒற்றுமை அவசியம். சங்கங்களுக்கு தேர்தல் நடத்துவதைத் தவிர்த்து ஏகமனதாக நிர்வாகிகளைப் போட்டியின்றித் தேர்வு செய்ய வேண்டும். பிரச்னைகள் இல்லாத சமூகங்களோ, வீடுகளோ கிடையாது. ஆனால், விட்டுக் கொடுத்துப் பணியாற்றினால் தீமை விளையாது. சமூகத்தில் மணவாழ்க்கை முறிவு அதிகரித்து வருவது கவலைக்குரியதாகும். அதைத் தடுத்து நிறுத்த சமுதாயப் பெரியவர்கள் அனைவரும் பாடுபட வேண்டும். நம் முன்னோர்கள் விட்டுச்சென்றுள்ள பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் இன்றைய இளைஞர்களுக்குக் கற்றுத்தர வேண்டும். தாய்மொழியாம் தமிழைக் காப்பதிலும், வளர்ப்பதிலும் நகரத்தார்களின் பங்கு அளப்பரியது. அனைத்துத்துறைகளிலும் நகரத்தார் தடம் பதித்துள்ளனர். குறிப்பாக பத்திரிகைகள், புத்தகப்பதிப்பகங்கள் போன்றவற்றில் பங்களித்து வருவது பெருமைக்குரியது. வெளிநாடுகளில் பொருளீட்டினாலும் சொந்த மண்ணை மறக்காமல் சொந்த வீட்டில்தான் திருமணத்தை நடத்தும் பாரம்பரிய பழக்கத்தை இன்றுவரை விடாமல் கடைப்பிடித்து வருபவர்களும், தரும காரியங்களுக்காக சொத்துகளை விட்டுக் கொடுத்தவர்களும் நகரத்தார்கள்தான். இத்தகைய பாரம்பரியமிக்க நகரத்தார் சமூகம் தங்கள் பகுதிகளில் உள்ள பாரம்பரியச் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும். இதற்காக சொத்துப் பாதுகாப்புக் குழு அமைத்து சொத்துகளைக் காப்பாற்ற வேண்டும் என்றார்.
இதில், கல்வி அறக்கட்டளைத் தலைவர் எஸ். ராமசாமி முன்னிலை வகித்தார். ஆந்திரா வங்கி முன்னாள் தலைவர் சி.வி. ராஜேந்திரன், தொழிலதிபர்கள் கே.எல். பழனியப்பன், சித. வள்ளியப்பன், கிர்லோ வீரப்பன் உள்ளிட்டோர் வாழ்த்தினர். |
|
|
|
|
|