|
NEWS REPORT: மூத்த குடிமக்களின் ரயில் கட்டண சலுகையில் புதிய முறையை கைவிடுக: ஜி.கே.வாசன் Jul 2, 16 |
|
மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணச் சலுகையைப் பெற அமல்படுத்தப்பட்ட புதிய முறையை கைவிட வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ரயில் பயணச் சீட்டு முன்பதிவில் 60 வயது நிரம்பிய ஆண்களுக்கு 40 சதவீதமும், 58 வயது நிரம்பிய பெண்களுக்கு 50 சதவீதமும் கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சலுகையைப் பெற முன்பதிவு செய்வதற்கான படிவத்தில் வயதை மட்டும் குறிப்பிட்டால் போதும் என்ற நடைமுறை இதுவரை இருந்து வந்தது.
ஆனால், இனி முன்பதிவு படிவத்தில் மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகை வேண்டுமா? வேண்டாமா? என்பதை குறிப்பிட வேண்டும். அவ்வாறு குறிப்பிடவில்லை என்றால் கட்டணச் சலுகை கிடைக்காது என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களில் பலர் மறதி, கவனக் குறைவு, விவரம் தெரியாமல் இருத்தல் போன்ற காரணங்களால் விண்ணப்பத்தில் இதுபோன்ற விவரங்களை பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம். இதனால் அவர்கள் முழு கட்டணத்தையும் செலுத்தும் நிலை ஏற்படும். இதனால் ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணச் சலுகையில் புதிய முறையை கைவிட வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். |
|
|
|
|
|