Nagaratharonline.com
 
ஆத்திக்காடு தெக்கூர் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா  Jul 6, 16
 
ஆத்திக்காடு தெக்கூர் கிராமத்தில் உள்ள பச்சை மூங்கில் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

ஆத்திக்காடு தெக்கூர்: இந்தக் கோயிலின் தல விருட்சமாக பச்சை மூங்கில் மரம் இருப்பதால், பச்சை மூங்கில் அய்யனார் என்று இப்பகுதி மக்களால் வணங்கப்பட்டு வருகிறார். ஆண்டுதோறும் இக்கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா ஆணி மாதத்தில் நடைபெறும். நிகழாண்டுக்கான விழா மதுஎடுத்தலுடன் கடந்த மாதம் (ஜூன்) 20-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து 26-ம் தேதி காப்புக் கட்டப்பட்டது.

28-ம் தேதி இவ்வூரைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்படும் பெண்களால் மது எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து புரவி எடுப்புத்திருவிழாவின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு ஊர் மக்களால் சுவாமி புரவிகள், நேர்த்திக் கடன் காளைகளும் புரவிப் பொட்டலில் இருந்து கச்சேரிக் கூடத்தருகே எடுத்து வந்து நிறுத்தப்பட்டது.

திங்கள்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற புரவி எடுப்பு நிகழ்ச்சியில், கோயிலுக்கான பெரிய புரவி, அரண்மனைப் புரவி, அப்பரக்காத்தான் புரவி, வரமுடையான் புரவி உள்ளிட்ட 4 புரவிகளுடன் நேர்த்திக் கடன் செலுத்துபவர்களின் நூற்றுக்கும் மேல்பட்ட காளைகளையும் கிராம மக்கள் கோயிலுக்கு சுமந்து சென்றனர்.

தோளில் சுமந்து செல்லப்படும் மண்ணால் செய்யப்பட்ட கோயில் புரவிகளும், காளைகளும் எவ்வித சேதமுமின்றி கோயிலுக்குச் சென்றால், அந்த ஆண்டில் ஊரில் நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம்.