|
கோட்டையூர் கொலு பங்களாவில் 77 ஆண்டுகளாக நவராத்திரி விழா Oct 8, 16 |
|
தொடர்ந்து 77 ஆண்டுகளாக, கோட்டையூர் கே.வி.ஏஎல்.எம். பங்களா மெச்சி ஆச்சி கொலு மண்டபத்தில் கலைநயமிக்க கொலு அமைக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கிய இக் கொலுவில், சிவன், முருகன், தொட்டில், ஆடும் கண்ணன் என ஆன்மிகம், கலைகளை பிரதிபலிக்கும் கொலு பொம்மைகள், செவ்விந்தியர், அமெரிக்கன், பிரிட்டிஷ் படைகளின் அணிவகுப்பு பொம்மைகள் என வரிசைப்படுத்தி அழகாக அமைக்கப்பட்டுள்ளன.
நவராத்திரி விழா நாளில் இந்த பங்களா திருவிழாக் கோலம் பூண்டுவிடுகிறது. கோட்டையூர், காரைக்குடி, செட்டிநாடு என பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தினமும் கொலுவை காண வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பேராசிரியர் அய்க்கண் நடுவராகக் கொண்ட சிந்தனைப் பட்டிமன்றமும் நடைபெற்றது. கடந்த புதன்கிழமை ஆண்டாள் திருக்கல்யாண அலங்காரக் காட்சியும், வியாழக்கிழமை இரவு சீதா கல்யாண வைபவமும், வெள்ளிக்கிழமை வனமோகினி ஐயப்பன் அலங்காரமும் வைக்கப்பட்டிருந்தது.
மேலும், நகரத்தார்கள் திருமண விழாவை போன்று, வெள்ளி, பித்தளை பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் என சீர்வரிசைகள் வைக்கப்பட்டிருந்தன. திருமண விழாவில் வழங்கப்படுவது போன்று தாம்பூலம் வழங்கப்பட்டு, கொலுவை காண வந்திருந்தவர்களை வழியனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, சனிக்கிழமை திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள், ஞாயிற்றுக்கிழமை குருவாயூரப்பன், திங்கள்கிழமை மகாலெட்சுமி, சரஸ்வதி, ராஜராஜேஸ்வரி, செவ்வாய்க்கிழமை கள்ளழகர் அலங்காரமும் வைக்கப்படுவதாக, இந்த கொலு விழாவை நடத்தி வரும் கவிஞர் வள்ளி முத்தையா தெரிவித்தார். |
|
|
|
|
|