|
வலையபட்டி மலையாண்டி கோயிலில் தவில் வித்வான் பத்மஸ்ரீ வலையபட்டி ஏஆர். சுப்ரமணியம் பவள விழா. Nov 15, 16 |
|
பொன்னமராவதி வலையபட்டி மலையாண்டி கோயிலில் தவில் வித்வான் பத்மஸ்ரீ வலையபட்டி ஏஆர். சுப்ரமணியம் பவள விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தொழிலதிபர் பிஎல்ஏ. சிதம்பரம் தலைமை வகித்தார். சங்கீத கலாநிதி ஏ.கே.சி. நடராஜன், பிள்ளையார்பட்டி கே. பிச்சைக்குருக்கள், விஆர்எம்ஏ. ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை நல்லி சில்க்ஸ் நிறுவனர் நல்லி குப்புசாமி செட்டியார் விழாவை தொடக்கி வைத்துப் பேசினார்.
தொடர்ந்து ஏ.ஆர். சுப்ரமணியம் பேசியது:
அனைத்துப் பதவிகளுக்கும் முன்னாள் என்று ஒன்று வரும். ஆனால் கலைக்கும், கல்விக்கும் மட்டுமே முன்னாள் என்பது கிடையாது.
அவை என்றும் போற்றுதற்குரியதாகும். 90-க்கும் மேற்பட்ட விருதுகள், பட்டங்கள் பெற்றிருந்தாலும் வலையபட்டி என்ற விருதை தெய்வம் எனக்கு அளித்த விருதாகக் கருதுகிறேன். கல்வி, இசை, ஆன்மிகம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து பெருமை கொள்வர் நகரத்தார் பெருமக்கள்.
இசைத்தொண்டில் தன்னிகரற்று விளங்குபவர் நல்லி குப்புசாமி செட்டியார். அதுபோல ஏகேசி அவர்களின் இசைத் தொண்டும் சிறப்பானதாகும். இறைவன் எனக்கு அளித்த இந்த இசைக் கலையை என்றும் போற்றுவேன் என்றார்.
தொடர்ந்து சங்கீத கலாநிதி ஏ.கே.சி. நடராஜனின் கிளாரிநெட் இசை மற்றும் நாகஸ்வர கச்சேரி நடைபெற்றது.
விழாவில் மலையாண்டிகோயில் நடப்பு காரியக்காரர்கள் பெரியண்ணன், பழனியப்பன், மீனாட்சிசுந்தரம், முத்துக்கருப்பன், ஏஆர். கதிரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். |
|
|
|
|
|