|
காரைக்குடியில் "ஷேர் ஆட்டோ'க்கள் இயக்க அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு Nov 17, 16 |
|
5 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஷேர் ஆட்டோ உரிமம் வழங்க கட்டுப்பாடு விதிக்க முடியாது என்று கூறி காரைக்குடியில் ஷேர் ஆட்டோ இயக்க அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை தொழில் வர்த்தக சங்கத் தலைவர் எம்.முத்து பழனியப்பன் தாக்கல் செய்த மனு:
காரைக்குடியில் ஷேர் ஆட்டோக்களை இயக்க அனுமதி கோரி மனு அளித்தோம். இந்த மனுவை வட்டார போக்குவரத்து அலுவலர் நிராகரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவில் மாவட்ட தலைநகரில் தான் ஷேர் ஆட்டோ இயக்க அனுமதி வழங்க முடியும். பிற பகுதிகளில் ஷேர் ஆட்டோ இயக்குவதற்கு அனுமதி வழங்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்து காரைக்குடியிலும் ஷேர் ஆட்டோ இயக்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வழக்குரைஞர் வாதிடுகையில், சென்னையில் 100 ஷேர் ஆட்டோக்களுக்கும், மாவட்ட தலைநகரங்களில் தலா 50 ஷேர் ஆட்டோக்களுக்கும் அனுமதி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டப்படி 5 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரப் பகுதிகளில் தான் ஷேர் ஆட்டோ இயக்க உரிமம் வழங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. காரைக்குடி மாவட்ட தலைநகர் அல்ல. இத்தகைய காரணங்களைக் கருத்தில் கொண்டு காரைக்குடியில் ஷேர் ஆட்டோ உரிமம் வழங்க மறுக்கப்பட்டது என்றார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 5 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை உள்ள பகுதிகளில் ஷேர் ஆட்டோ உரிமம் வழங்க கட்டுப்பாடு விதிக்க முடியாது என குறிப்பிட்டு, காரைக்குடியில் ஷேர் ஆட்டோ உரிமம் வழங்க மறுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர்.
மேலும் மனுதாரரின் மனுவை பரிசீலித்து உரிமம் வழங்குவது குறித்து 3 மாதங்களில் உரிய முடிவெடுக்கவும் உத்தரவிட்டனர். |
|
|
|
|
|