|
காரைக்குடி கம்பன் கழகத்தில் உரைக்கோவை நூல் வெளியீடு Dec 14, 16 |
|
காரைக்குடி கம்பன் கழக டிசம்பர் மாதக் கூட்டத்தில், கருமுத்து தியாகராஜனார் உரைக்கோவை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
காரைக்குடி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில், கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் வரவேற்றுப் பேசினார். அதில், காரைக்குடி கம்பன் கழக விழாக்களில் பங்குகொண்ட கலைத்தந்தை கருமுத்து. தியாகராசன் ஆற்றிய உரைகள் கட்டுரையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இதை வெளியிடுவதில் கம்பன் கழகத்துக்கு பெருமை என்றார்.
தஞ்சாவூர் மூத்த இளவரசர் எஸ். பாபாஜிராஜாசாஹேப் போன்ஸலே சத்ரபதி, கலைத்தந்தை கருமுத்து தியாகராசனார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பினை வெளியிட்டுப் பேசுகையில், கலைத்தந்தை தியாகராசன் கட்டுரைகள் அவர் கால தமிழகத்தின் சூழலை எடுத்துரைக்கின்றது. குறிப்பாக, இந்து சமய அறநிலையத் துறை பற்றிய அவரது கருத்து அனைவரும் அறிந்து கொள்ளவேண்டியது. அவரது தமிழ்த் தொண்டு, ஆலைப் பணி, கல்விப் பணி போற்றுதலுக்குரியது என்றார்.
விழாவில், நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு, கலைத்தந்தை என்ற தலைப்பில் பேராசிரியர் இளம்பிறை மணிமாறன் பேசியதாவது: கருமுத்து. தியாகராசனின் பண்புகள் அவரது கம்பராமாயண ஆர்வத்தில் வெளிப்படுத்தின. கல்லூரியில் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள் வாழ்க்கைப் படிப்பினைக் கற்றுக்கொள்வதில்லை. படிப்பை கலை, நடனம், இசை கலந்து தரவேண்டும். இக்கால இளைஞர்களின் வாழ்க்கை மேம்பட கல்வி வெறும் மனப்பாடப் பகுதியாக இல்லாமல், மனிதத்தை வளர்க்கும் பண்பாடு, இசை, கலைத்திறன் கொண்டதாக இருக்கவேண்டும் என்றார்.
நூல் தொகுப்பாசிரியரும் மதுரை தியாகராஜர் கலைக் கல்லூரி செயலருமான ஹரி தியாகராசன் தனது ஏற்புரையில், எனது தாத்தா பல ஆலைகள், கல்வி நிறுவனங்கள், கோயில்கள் ஆகியவற்றை நிர்வகித்தவர். அவர், கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் கோரிக்கைகளைக் கனிவாகக் கேட்டவர் என்றார். முடிவில், பேராசிரியர் மு. பழனியப்பன் நன்றி கூறினார். |
|
|
|
|
|