|
NEWS REPORT: கோவிலூர் மடாலயத்தில் கண் மருத்துவமனை கட்ட அடிக்கல் Jan 26, 17 |
|
கோவிலூர் மடாலய வளாகத்தில் புதிதாக கண்மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
கோவிலூர் மடாலயம் மற்றும் சென்னையைச் சேர்ந்த காணல் அறக்கட்டளை ஆகியன சார்பில் மருத்துவமனை கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா கோவிலூரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், காணல் அறக்கட்டளை நிர்வாக இயக்குநரும் சென்னையில் உள்ள "ப்ரண்ட் லைன்' கண் மருத்துவமனை நிர்வாகியுமான என். கிருஷ்ணன் பேசியது:
கோவிலூர் மடாலயம் வழங்கிய 2 ஏக்கர் நிலப்பரப்பில் மருத்துவமனை கட்டப்பட உள்ளது. அதை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றி, உலகத்தரம் வாய்ந்த கண் மருத்துவ சிகிச்சைப்பிரிவு, ஆராய்ச்சி மையம் ஆகியவை உருவாக்கப்படும். செட்டிநாடுப்பகுதி மக்கள் மட்டுமல்லாது தென் தமிழக மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளுடன் மருத்துவமனை அமைக்கப்படும். ஏழை மக்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு குறைந்த கட்டணத்திலும் சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக அறக்கட்டளையின் இயக்குநர் ரத்னா பழனியப்பன் வரவேற்றார். கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப சுவாமிகள், பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, காரைக்குடி டி.எஸ்.பி கார்த்திகேயன், காரைக்குடி தமிழிசைச் சங்கத்தலைவர் பி.ஆர். சொக்கலிங்கம், காரைக்குடி தொழில் வணிகக்கழகத் தலைவர் முத்து. பழனியப்பன், செயலர் சாமி.திராவிடமணி, கோவிலூர் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் அழகப்பன், கோவிலூர் மடாலயக் கல்வி நிறுவனங்களின் ஆலோசகர் குமரப்பன், கவிஞர் செல்ல கணபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். |
|
|
|
|
|