Nagaratharonline.com
 
தேவகோட்டையில் பிஎஸ்என்எல் சேவைகள் தொடர்ந்து பாதிப்பு  Apr 21, 10
 
தேவகோட்டை, ஏப். 20: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பிஎஸ்என்எல் சேவை தொடர்ந்து இரண்டாவது முறையாக பாதிக்கப்பட்டது.

தேவகோட்டை நகரில் பிஎஸ்என்எல் மட்டுமே இண்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது. எனவே, இங்கு இயங்கிவரும் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், இண்டர்நெட் மையங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் பிஎஸ்என்எல் இண்டர்நெட் இணைப்புகளையே நம்பியுள்ளன.

ஆனால், சமீப காலமாக பிஎஸ்என்எல் சேவை அடிக்கடி செயல் இழந்து வருவது வாடிக்கையாளர்களை பெரிதும் பாதித்து வருகிறது.

கடந்த ஏப்ரல் 17-ம் தேதி ஆறாவயல் அருகே பாலம் கட்ட பள்ளம் தோண்டும்போது கேபிள் துண்டிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது. இதனால், 24 மணி நேரத்துக்கும் மேல் இணைப்புகள் செயல்படாததால், பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. மீண்டும் திங்கள்கிழமை காலை முதல் செயல்படவில்லை.

இது குறித்து, அதிகாரிகளிடம் கேட்டபோது, மறுபடியும் அதே ஆறாவயல் பகுதியில் அடுத்த பால வேலையின்போது கேபிள் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது எனத் தெரிவித்தனர். இதனால், அன்றைய தினமும் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. மேலும், தானியங்கி பணப் பரிவர்த்தனை மையமும் (ஏடிஎம்) பாதிக்கப்பட்டதில், பலர் அவசரத் தேவைக்குக் கூட பணம் எடுக்க முடியாமல் தவித்தனர்.

சாலையில் பள்ளம் தோண்டும்போது, தனியார் நிறுவனங்களைப் போல் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அந்த இடத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு, கேபிள் துண்டிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளவது அவசியமாகும்.

ஏற்கெனவே, பிஎஸ்என்எல் செல் சேவையில் இணைப்பு சரிவர கிடைப்பதில்லை என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வரும் வேளையில், தற்போது இண்டர்நெட் சேவையும் பாதிக்கப்பட்டு வருவதால், இதையே நம்பி உள்ள நிறுவனங்கள் பெரிதும் நஷ்டத்துக்கு ஆளாக வேண்டியுள்ளது.

எனவே, இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர்.

Source:Dinamani