Nagaratharonline.com
 
அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக்கும் அறிவிப்பை மறுபரிசீலனை செய்க: வாசன்  Aug 28, 17
 
வாகன ஓட்டுனர்கள் வண்டியை ஓட்டி வரும் போது அசல் ஓட்டுனர் உரிமத்தை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திங்கட்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் சாலை விதிமீறல்களை குறைக்கும் முயற்சியாக வரும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டுனர்கள் அசல் ஓட்டுனர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

மாநிலம் முழுவதும் சாலை விபத்துக்களை குறைப்பதற்கு விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

அதற்காக வாகன ஓட்டுனர்கள் வண்டியை ஓட்டி வரும் போது அசல் ஓட்டுனர் உரிமத்தை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அசல் ஓட்டுனர் உரிமம் தொடர்பான தற்போதைய தமிழக அரசின் அறிவிப்பு திரும்ப பெறப்பட வேண்டும்.

வாகனங்களை ஓட்டி வரும் போது அசல் ஓட்டுனர் உரிமத்தை தவற விடுவதற்கான வாய்ப்பும் உண்டு. இந்நிலையில் வாகன ஓட்டிகள் தவறவிட்ட ஓட்டுனர் உரிமம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும், பின்பு கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதற்கு காவல்நிலையத்தில் சான்றிதழ் வாங்க வேண்டும், அந்த சான்றிதழை R.D.O. அவர்களிடம் கொடுக்க வேண்டும்.

R.D.O. மூலமும் விசாரிக்கப்பட்டு கிடைக்கவில்லை என்றால் புதிய ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் 20 ரூபாய் பத்திரத்தில் அசல் ஓட்டுனர் உரிமத்தை நான் தவறாக பயன்படுத்த மாட்டேன் என்று எழுதிக்கொடுக்க வேண்டும்.

பிறகு 10 நாட்களில் புதிய ஓட்டுநர் உரிமம் கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. புதிய ஓட்டுனர் உரிமம் கிடைக்கும் வரை போக்குவரத்து காவல்துறையின் பரிசோதனையில் இவர்கள் உட்படுவதற்கு வாய்ப்புண்டு. இத்தகைய பரிசோதனையின் போது வாகன ஓட்டிகளுக்கு தேவையற்ற இடையூறுகளும், அச்சுறுத்தலும் ஏற்படும். இது தவிர்க்கப்பட வேண்டும்.

எனவே தமிழகத்தில் வாகன விபத்துக்களை குறைப்பதற்கும், உயிரிழப்புகளை தடுப்பதற்கும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அதற்காக வாகன ஓட்டிகளின் போக்குவரத்துக்கு தேவையற்ற இடையூறுகளையும், காலதாமதத்தையும் ஏற்படுத்தும் விதமான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபடக்கூடாது.

மேலும் வாகன ஓட்டிகளின் போலியான ஓட்டுனர் உரிமத்தை கண்டறியவும், ஓட்டுனர் உரிமத்தை தொலைத்தவர்கள் கூறுவதைக் கேட்டும் உண்மை நிலைக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது போக்குவரத்து காவல்துறையின் கடமை.

எனவே தமிழகத்தில் இருசக்கர வாகனம் மற்றும் கார், லாரி, ஆட்டோ, பேருந்து போன்ற வாகனங்களை இயக்குபவர்களிடம் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாததற்கு உரிய காரணம் இருந்தால் அதனை ஏற்று அவர்களின் போக்குவரத்துக்கு உதவிட வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று தமாகா வலியுறுத்துகிறது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.