Nagaratharonline.com
 
கோவிலுார் மடாலய நிறுவனர் நாள் விழாவில் இயக்குனர் SP. முத்துராமன்.  Sep 30, 17
 
மாணவர்களிடம் நாட்டுப்பற்று குறைந்து வருகிறது, இதனால் தான் தேசிய கீதம் ஒலிக்கும்போது பலர் மரியாதை செலுத்துவதில்லை,'' என காரைக்குடியில் திரைப்பட இயக்குனர் எஸ்பி.முத்துராமன் பேசினார்.

கோவிலுார் மடாலய கல்வி நிறுவனங்கள் சார்பில் நிறுவனர் நாள் விழா ஆதீனம் மெய்யப்ப சுவாமி தலைமையில் நடந்தது. ஆலோசகர் குமரப்பன் வரவேற்றார்.

திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பேசியதாவது: மாணவர்களுக்கு மதிப்பெண் மட்டும் முக்கியமல்ல. ஒழுக்கம், நாட்டுப்பற்று அவசியம். நம் நாட்டில் நாட்டுப்பற்று இல்லை. இதனால் தான் திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கும்போது பலர் மரியாதை செய்வதில்லை. இது வருத்தத்திற்குரியது. வாழ்க்கையில் ஒழுக்கமாக வாழ திருக்குறள் வழிகாட்டும்.
படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்ற போது அரசு அதிகாரிகளிடம் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியவில்லை. இதை எண்ணி வெட்கப்பட்டேன். கல்லுாரி படிக்கும் காலத்தில் ஆங்கிலத்தை ஒழுங்காக கற்றிருந்தால் இந்நிலை வந்திருக்காது. எனவே, படிக்கும் காலத்தில் மாணவர்கள் அனைத்தையும் நன்கு கற்க வேண்டும்.

நீதிபதி மகாதேவன் பேசியதாவது: ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒரு மறை நுால் உண்டு.
ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுக்கு முன் ஜாதி, சமய, மொழி, இறைவனை குறிப்பிடாமல் அனைத்து மொழியினரும் படிக்கும் வண்ணம் திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. ஈதல் இசைபட வாழ்தல்' என்ற குறள்படி வாழ்ந்தவர் நாச்சியப்ப சுவாமிகள், என்றார்.