Nagaratharonline.com
 
புதிதாக உருவான சிங்கம்புணரி தாலுகா இணைப்புக்கு 8 ஊராட்சிகளின் பொதுமக்கள் எதிர்ப்பு  Oct 1, 17
 
சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக உருவான சிங்கம்புணரி தாலுகாவுடன் இணைத்ததற்கு 8 ஊராட்சிகளைச் சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து அரசுக்கு வருவாய்த் துறையினர் அறிக்கை அனுப்பியுள்ளனர்.திருப்புத்துார் தாலுகாவுடன் இருந்த சிங்கம்புணரி, வாராப்பூர், எஸ்.எஸ்.கோட்டை பிர்காக்களை இணைத்து மே23ல் புதிதாக சிங்கம்புணரி தாலுகா உருவாக்கப்பட்டது.

திருக்கோஷ்டியூர், நாச்சியாபுரம், இளையாத்தங்குடி, நெற்குப்பை ஆகிய பிர்காக்கள் திருப்புத்துார் தாலுகாவுடன் உள்ளன. மேலும், எஸ்.எஸ்.கோட்டை பிர்காவில் இருந்து கருப்பூர் வருவாய் கிராமம் திருப்புத்துார் தாலுகாவுடனும், திருக்கோஷ்டியூர் பிர்காவில் இருந்து அரளிக்கோட்டை, ஏரியூர் வருவாய் கிராமங்கள் சிங்கம்புணரியுடனும் இணைக்கப்பட்டன.

இந்நிலையில் அரளிக்கோட்டை, ஏரியூர், எஸ்.மாம்பட்டி, வடவன்பட்டி, மல்லாக்கோட்டை, ஜெயங்கொண்டநிலை, எருமைப்பட்டி, எஸ்.எஸ்.கோட்டை ஆகிய 8 ஊராட்சிகளைச் சேர்ந்த கிராம மக்கள் சிங்கம்புணரி தாலுகாவுடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கிராம மக்கள் கூறியதாவது: 8 ஊராட்சிகளும் திருப்புத்துாருக்கு அருகில் உள்ளன. ஆனால் பல கி.மீ., துாரத்தில் உள்ள சிங்கம்புணரியுடன் இணைத்துள்ளனர். மேலும் சிங்கம்புணரி சென்றுவர நேரடி பஸ் வசதியும் இல்லை.

இதனால் தாலுகா அலுவலகத்திற்கு செல்ல சிரமமாக உள்ளது. மீண்டும் எங்கள் கிராமங்களை திருப்புத்துார் தாலுகாவுடன் இணைக்க வேண்டும் என்றனர்.

வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கிராமமக்களின் எதிர்ப்பு குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.