Nagaratharonline.com
 
அனுமதி பெறாத மனைகளை வரன்முறைப்படுத்த புதிய திட்டம்: ரியல் எஸ்டேட், கட்டுமான துறையினர் வரவேற்ப  Oct 14, 17
 
அனுமதி பெறாத மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டம் எளிமைப்படுத்தப்பட்டு, கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளதற்கு கட்டுமான துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்

அரசின் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மனைகளையும், மனைப் பிரிவுகளையும் வரன்முறைப்படுத்துவதற்கான காலம் 6 மாதத்தில் இருந்து ஒரு ஆண்டாக (2018 மே 3-ம் தேதி வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. மனைப்பிரிவுகளை 3 வகைகளாக பிரித்து வரன்முறைப்படுத்தும் முறை நீக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு வெளியே உள்ள ஊரகப் பகுதிகளில் 29-11-1972 முதல் 20-10-2016 வரையிலும், சென்னைக்கு வெளியே நகர்ப்புறப் பகுதிகளில் 1-1-1980 முதல் 20-10-2016 வரையிலும் உருவாக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனை உட்பிரிவுகளில் அமைந்துள்ள மனைகளை வரன்முறைப்படுத்தலாம். இந்த தேதிகளுக்கு முன்பு வாங்கப்பட்ட அனைத்து அனுமதியற்ற மனைப்பிரிவுகள், மனைகள் வரன்முறை செய்யப்பட்டதாகவே கருதப்படும்.

கட்டணம் குறைப்பு

மேலும் வளர்ச்சிக் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் இக்கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.500-ஆக குறைகிறது. இத்துடன் வரன்முறைக் கட்டணம் ரூ.100 சேர்த்து ரூ.600 செலுத்த வேண்டும். சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை நகராட்சியில் வளர்ச்சிக் கட்டணம் ரூ.350-ல் இருந்து ரூ.250 ஆகிறது. இத்துடன் வரன்முறைக் கட்டணம் ரூ.60 சேர்த்து ரூ.310 செலுத்த வேண்டும்.

அதுபோல நிலை-1 மற்றும் நிலை-2 நகராட்சியில் வளர்ச்சிக் கட்டணம் ரூ.250-ல் இருந்து ரூ.150 ஆகிறது. இத்துடன் வரன்முறைக் கட்டணம் ரூ.60 சேர்த்து ரூ.210 செலுத்தலாம். பேரூராட்சியில் வளர்ச்சிக் கட்டணம் ரூ.150-ல் இருந்து ரூ.75 ஆகிறது. இத்துடன் ரூ.30 சேர்த்து ரூ.105 செலுத்த வேண்டும்.

கிராம ஊராட்சியில் இருந்த ரூ.100 கட்டணம் ரூ.25 ஆக குறைக்கப்படுகிறது. இத்துடன் வரன்முறைக் கட்டணம் ரூ.30 சேர்த்து ரூ.55 செலுத்தினால் போதும். இவற்றுடன் பரிசீலனைக் கட்டணமாக மனை ஒன்றுக்கு ரூ.500 செலுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு ...

இதுகுறித்து அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்க தென்னக மையத்தின் செயலர் எஸ்.ராமபிரபு கூறியதாவது: மனைப்பிரிவு மேம்பாட்டாளர்கள் வரன்முறைப்படுத்தக் கோரும் விற்கப்படாத மனைகளின் பரப்பளவில் 10 சதவீத நிலத்தை பொதுப்பயன்பாட்டுக்கான திறந்தவெளி ஒதுக்கீடாக உள்ளாட்சிக்கு தானமாக வழங்க வேண்டும். தனிநபரால் வாங்கப்பட்ட மனைக்கு திறந்தவெளி ஒதுக்கீடு விதிகளில் இருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படுகிறது என்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. இதன் மூலம் சிறிய அளவில் மனை வாங்கியவர்களும் பயன்பெறுவர். இந்த புதிய திட்டம் குறித்து மக்களிடையே போதிய அளவு விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும்.