Nagaratharonline.com
 
விரைவு ரயில்களில் காலியிடங்கள் இருக்கும்போது 2-ம் வகுப்பு டிக்கெட் வைத்திருப்போருக்கு ஏசி பெ  Dec 8, 17
 
விரைவு ரயில்களில் கால இடங்கள் இருக்கும்போதெல்லாம் 2-ம் வகுப்பு டிக்கெட் வைத்திருப்போருக்கு, ஏசி பெட்டிகளில் இடம் ஒதுக்கீடு செய்யும் திட்டம், பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

விரைவு ரயில்களில் பண்டிகை காலங்கள் அல்லாத சில மாதங்களில், 20 முதல் 30 சதவீதம் இடங்கள் காலியாக இருக்கும். இப்படி காலியாக செல்லும் ரயில் பெட்டிகளில் கூடுதல் கட்டணமின்றிப் பயணிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய ரயில்வே முடிவு செய்தது. அதன்படி, பயணிகளின் டிக்கெட் முன்னுரிமை அடிப்படையில், கடந்த சில ஆண்டுகளாக விரைவு ரயில்களில் காலியிடங்கள் இருக்கும்போதெல்லாம் 2-ம் வகுப்பு டிக்கெட் வைத்திருப்போருக்கு ஏசி பெட்டிகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டம் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதுதொடர்பாக சென்னை ரயில் கோட்ட முதுநிலை டிக்கெட் ஆய்வாளர் எல்.அசோக்குமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பண்டிகை அல்லாத, தொடர் விடுமுறை இல்லாத நாட்களில் விரைவு ரயில்களில் கணிசமான அளவுக்கு காலி இடங்கள் இருக்கும். அப்படி ஏசி பெட்டிகளில் இடம் காலியாக இருக்கும்போது, 2-ம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகளின் டிக்கெட் முன்னுரிமை அடிப்படையில், அவர்களில் கணிசமானவர்களுக்கு ஏசி பெட்டிகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பயணிகளின் செல்போனுக்கு குறுந்தகவலும் அனுப்பப்படும். இதேபோல், 2-ம் வகுப்பு ஏசியில் முன்பதிவு செய்தவர்களில் சிலருக்கு முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஒரே விரைவு ரயிலில் அதிகபட்சமாக 50 டிக்கெட் வரையில் ஒதுக்கீடு செய்துள்ளோம். இதற்காக பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை. இதனால், பயணிகள் மகிழ்ச்சியுடன் ஏசி பெட்டிகளில் பயணம் செய்கின்றனர். ஒரு சில பயணிகள் ஏசி பெட்டிகளில் பயணம் செய்வதை வேண்டாமென தவிர்ப்பார்கள். இவர்களை நாங்கள் கட்டாயப் படுத்துவதும் இல்லை என்றார்.