Nagaratharonline.com
 
NEWS REPORT: மனை வரன்முறைபடுத்தும் விண்ணப்பங்கள் : குழப்பம்  Dec 8, 17
 
அனுமதியற்ற மனை பிரிவுகளை முறைப்படுத்துவதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையில் காரைக்குடி நகராட்சியில் இதுவரை ஒருவர் கூட மனை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கவில்லை.
மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப குடியிருப்பு பகுதிகள் விரிவாக்கம் பெற்றன. இதனால் அனுமதியில்லாத மனைப்பிரிவுகளில் பலர் வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் பல லட்சம் பேர் அனுமதி இல்லாத மனைப்பிரிவுகளில் வீடு கட்டி வசிக்கின்றனர். இவ்வாறு அனுமதி இல்லாத மனைப்பிரிவுகளை முறைப்படுத்த ஒழுங்கு முறை விதிகளை கடந்த மே மாதம் அரசு வெளியிட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மற்றும் நகர வளர்ச்சி குழும உதவி இயக்குனரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
வீட்டு மனைகளை உருவாக்கிய ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், நிலத்தை வாங்கிய உரிமையாளர்கள் இதற்காக விண்ணப்பித்து நிலத்தை வரன்முறைபடுத்தி கொள்ளலாம். இந்த நிலங்கள் கடந்த 2016-ம் ஆண்டு அக்.20-க்கு முன்பு உருவாக்கப்பட்ட வீட்டு மனைகளாக இருக்க வேண்டும்.
நிலங்களை வரன்முறைப்படுத்த நகராட்சி பகுதிகளில் சதுர மீட்டருக்கு ரூ.60 நிர்ணயிக்கப்பட்டது. வளர்ச்சி கட்டணமாக சதுர மீட்டருக்கு ரூ.350-ம், திறந்த வெளி பொது நிலம் விடாமல் இருந்தால் ஒட்டு மொத்த வீட்டு மனையின் சந்தை மதிப்பில் 10 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும், ஆய்வு கட்டணம் ரூ.500, என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
காரைக்குடி நகராட்சியில் அங்கீகாரமில்லாத 40 மனைப்பிரிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் வசிப்பவர்களில் ஒருவர் கூட இதுவரை மனை வரன்முறைக்காக விண்ணப்பிக்கவில்லை.
காரைக்குடி ராமு கூறும்போது: மனை வரன்முறைக்கு அரசு அறிவித்துள்ள கட்டணம் கூடுதலாக இருப்பதால் வரன்முறைக்கு பல லட்சம் கட்டணமாக செலுத்த வேண்டி உள்ளது. ஏற்கனவே கடந்த 20 ஆண்டுக்கு போடப்பட்ட மனைகள் விற்கப்பட்டு தற்போது பலர் அதில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.
இதில் ஒரு மனையில் வசிப்பவர் மட்டும் அப்ரூவலுக்கு விண்ணப்பித்தால் மொத்த லே அவுட்டுக்கும் சேர்த்து அவர் பணம் செலுத்த வேண்டியுள்ளது.
பொது இடம் இல்லாததால் அதற்குரிய பணத்தையும் இடத்தை வாங்கிய உரிமையாளர் செலுத்த வேண்டியது உள்ளது. இதனால் யார் முதலில் அப்ரூவல் பெறுவது என்ற குழப்பத்தில் யாரும் விண்ணப்பிக்கவில்லை. ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் நிலத்தை விற்று விட்டதால், இது குறித்து கவலைப்படுவது இல்லை.
எனவே, பழைய மனை வரன்முறை கட்டணத்தை குறைக்க வேண்டும். டி.டி.சி.பி., அப்ரூவலுக்கு சென்றால் பைல்கள் பல மாதங்கள் கிடப்பில் போடப்படுகிறது. உள்ளாட்சியிலேயே அப்ரூவல் பெற அரசு வழிவகை செய்ய வேண்டும், என்றார்.