Nagaratharonline.com
 
NEWS REPORT: வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்: வாழ்வியல் நெறிகளை போதித்தவர் வள்ளலார்  Jan 31, 18
 
வடலூர் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் 1823-ம் ஆண்டு ராமையா - சின்னம்மை தம்பதியருக்கு பிறந்தவர் வள்ளலார். சிறுவயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப் பெற்று பல நூற்றுக்கணக்கான அருட் பாடல்களை அருளியுள்ளார். அவர் மக்களுக்கு அருளிய பாடல்கள் ‘திருவருட்பா’ என்று போற்றப்படுகிறது.

கடவுள் ஒருவரே - இறைவன் ஒளி வடிவானவன்’ என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் 1867-ம் ஆண்டு வடலூரில் சத்திய ஞான சபையை வள்ளலார் நிறுவினார்.

மனித ஸ்தூல உடல் அமைப்போடு ஒப்பிடும் வகையில் சத்தியஞான சபை எண் கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தெற்கு வாயில் வழி உள் சென்றால், வலப்புறம் பொற்சபையும் இடப்புறம் சிற்சபையும், பஞ்சபூதங்களைக் குறிக்கும் ஐந்து படிகளையும் காணலாம். அவற்றைக் கடந்து உள்ளே சென்றால், சதுர வடிவ பீடத்தின் மேல் வள்ளலார் ஏற்றி வைத்த அணையா தீபமும், அதற்குப் பின்னே 6.9 அடி உயரமும், 4.2 அடி அகலமும் கொண்ட நிலைக் கண்ணாடியையும் காணலாம். கண்ணாடியை மறைக்கும் வண்ணம் ஏழு நிறங்களைக் கொண்ட ஏழு திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இந்தத் திரைகளை விலக்கி, கண்ணாடி யில் தெரியும் தீபத்தை தரிசிப்பதே ‘ஜோதி தரிசனம்’ எனப்படு கிறது.

இந்த ஜோதி தரிசனத்தை 1872-ம் ஆண்டு தைப்பூசத்தன்று சத்தியஞான சபையில் வள்ள லார் தொடங்கி வைத்தார். அது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தைப்பூசத்தன்று மட்டுமே ஏழு திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனத்தை காணலாம். மற்ற மாதங்களில் வரும் பூச நட்சத்திர நாளன்று ஆறு திரைகள் மட்டுமே விலக்கப்படும்.

ஏழு திரைகளின் தத்துவங்கள்

ஏழு வண்ணத் திரைகளுக்கும் முறையே ஒவ்வொரு தத்துவங்கள் உள்ளன. கருப்புத்திரை- மாயையை விலக்கும் (அசுத்த மாயா சக்தி), நீலத்திரை - உயர்ந்த நோக்கத்துக்கு ஏற்படும் தடையை விலக்கும் (சுத்த மாயா சக்தி), பச்சைத்திரை - உயிர்களிடம் அன்பு, கருணையை உண்டாக்கும் (கிரியா சக்தி), சிவப்புத் திரை - உணர்வுகளைச் சீராக்கும் (பரா சக்தி), பொன்னிறத்திரை - ஆசைகளால் ஏற்படும் தீமைகளை விலக்கும் (இச்சா சக்தி), வெள்ளைத் திரை - மாயைகளை விலக்கி இறை நிலையை உணரச் செய்யும் (ஞான சக்தி). இந்த ஆறு வண்ணங்களும் இணைந்த ஏழாவது திரை - உலக மாயைகளை விலக்கும் (ஆதி சக்தி).

மக்களின் ‘அறியாமை’ என்னும் திரை விலகி ஞானம் பெறவே வடலூர் சத்தியஞான சபையில் தைப் பூச தினத்தன்று 7 திரைகள் விலக்கப்படுகின்றன. எளிய மக்கள் பசியைப் போக்க சத்திய ஞானசபை அருகிலேயே தர்ம சாலையை நிறுவினார் வள்ளலார். இந்த தர்ம சாலையில் அடுப்பு அணையாமல் அன்று முதல் இன்றுவரை மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இப்படி வாழ்ந்த வள்ளலார் வடலூர் அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்றார். இது, ஒவ்வொரு வருடமும் தை மாதம் பூச நட்சத்திரத்தன்று தைப் பூச திருவிழாவாக வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.