|
அலவாக்கோட்டையில் 12-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு Mar 16, 18 |
|
அலவாக்கோட்டை அலவாகண்மாயின் தென்புறம் தோப்பு விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்புள்ள தூணில் வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்டு இருந்தன. இதனை சிவகங்கையை அடுத்த திருமலை டாக்டர் அப்துல்கலாம் நற்பணி மன்ற உறுப்பினர் அய்யனார் மற்றும் உறுப்பினர்கள் பார்வையிட்டபோது, அது பண்டைய கால கல்வெட்டு என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் கழகத்தலைவர் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் கல்வெட்டு இருக்கும் இடத்திற்கு வந்து, டாக்டர் அப்துல்கலாம் நற்பணி மன்றம், திருமலை இளைஞர்களுடன் சேர்ந்து படி எடுத்தார். அப்போது அந்த கல்வெட்டு 12-ம் நூற்றாண்டை சேர்ந்தது என தெரியவந்தது.
இதுகுறித்து டாக்டர் அப்துல்கலாம் நற்பணி மன்ற உறுப்பினர் அய்யனார் கூறியதாவது:-
அலவாக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் படி எடுக்கப்பட்டது. இதில் “நாயத்துக்கு விளாகம் சோ, தேவர் திருநாமத்திற்கு காணி அழகியபாண்டிய புரத்துக்களவழி” என்றும், “அருமொழி நாதருக்கு சசிவர்ணத்தேவர் கல்நாட்டி விட்ட ஆபரணநல்லூர்” என்றும், “விட்ட மதித்து ராய வீரபாண்டி நாட்டு சோழ மூவேந்த வேளான் மகன் ஸ்ரீராம மூவேந்த வேளான்” என்று பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஆபரணநல்லூரை தோற்றுவித்தவர் சிவகங்கை சீமையின் முதல் மன்னர் சசிவர்ணத்தேவர் ஆவார். இந்த பகுதியில் விவசாயம் செழித்து இருந்துள்ளது. ஆதலால் இந்த காணியை கொடுத்து அப்பகுதி மக்களுக்கு நல்லதை செய்துள்ளார். இங்கு சிவன் கோவில் இருந்ததாகவும், அந்த கோவில் இருந்த இடத்தை அழகியபாண்டியநல்லூர் என்றும், ஆபரணநல்லூர் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 2 விநாயகர் சிலைகளில் ஒன்று 7-ம் நூற்றாண்டையும், மற்றொன்று 10-ம் நூற்றாண்டையும் சேர்ந்தது. இங்கு பலி பீடம், இடிந்த கோவில் கற்கள் காணப்படுகின்றன. |
|
|
|
|
|