|
ஊரை பசுமையாக்க களமிறங்கிய வட அமெரிக்க நகரத்தார் Jun 6, 18 |
|
சிவகங்கை மாவட்டம் நகரத்தார் பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க ஏராளமான ஊரணிகள் அமைக்கப்பட்டன. சில ஆண்டுகளாக மழையளவு குறைந்து வருவதால், நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. மழைக்கு காரணமான மரங்களை வளர்த்து, சொந்த ஊர்களை பசுமையாக்க வடஅமெரிக்க நகரத்தார் சங்கத்தினர் முடிவு செய்தனர்.
அவர்களும், நாட்டரசன்கோட்டை நகரத்தாரும் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நாட்டரசன்கோட்டையில் முதற் கட்டமாக நேற்று 200 மரக்கன்றுகளை நடவு செய்தனர். பசுமை சக்தி இயக்கம் அழகாபுரி முருகப்பன் தலைமை வகித்தார். நாட்டரசன்கோட்டை முன்னாள் பேரூராட்சித் தலைவர் முருகானந்தம், சுப்ரமணியன், ரவி பங்கேற்றனர்.
முருகப்பன் கூறியதாவது: மரங்களை அழித்ததால் மழை குறைந்து வருகிறது.
இதனால் மரக்கன்றுகளை நடவு செய்கிறோம். இதற்கு வடஅமெரிக்க நகரத்தார் நிதியுதவி அளித்தனர். பூவரசு, இலுப்பை, புங்கன், வேம்பு, ஆலமரம், அரசமரம், வில்வம் போன்ற நிழல் தரும் பாரம்பரிய மரக்கன்றுகளை நடவு செய்கிறோம். அவற்றை தொடர்ந்து 2 ஆண்டு பராமரிக்க பணியாளர்களை நியமித்துள்ளோம். தொடர்ந்து நகரத்தார் வசிக்கும் பகுதிகளில் மரங்களை நட திட்டமிட்டுள்ளோம், என்றார். |
|
|
|
|
|