Nagaratharonline.com
 
NEWS REPORT: FSI -அதிகரிப்பின் சாதகமும், பாதகமும்  Nov 11, 18
 
கட்டிடக் கட்டுமானப் பரப்புக்கும், மனையின் பரப்புக்கும் இடையிலான விகிதம் கட்டிடத் தளப்பரப்பு குறியீடு (Floor Space Index - எஃப்எஸ்ஐ) எனப்படுகிறது. சென்னையில் இந்த விகிதம் 1.5 ஆக இருந்தது. அதாவது, மனை பரப்பைவிட ஒன்றரை மடங்கு பரப்புக்கு மாடிகள் கட்டிக்கொள்ளலாம்.

இந்த நிலையில், மக்களின் வீட்டுக் கனவை நனவாக்கவும், வீடுகளின் விலை குறைவதற்காகவும் எஃப்எஸ்ஐ குறியீடு தற்போது 2 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி 1000 சதுர அடி மனையில் 2000 சதுர அடி பரப்பு வரை மாடிகள் கட்டிக்கொள்ளலாம்.

இதன் சாதக, பாதக அம்சங்கள் குறித்து கட்டுமானத் துறை நிபுணர்கள் கூறுவதாவது:

இந்திய ரியல் எஸ்டேட் நிறுவன சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) சென்னை தலைவர் டபிள்யூ.எஸ்.ஹபீப்:

எஃப்எஸ்ஐ அதிகரிப்பால் வீடுகள் அதிகரிக்கும். அதற்கேற்ப பாதுகாக்கப்பட்ட குடிநீர், மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய், சாலை வசதி, பொது போக்குவரத்து வசதி உள்ளிட்ட கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும். சாலையில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டும். அரசு, தனியார் மூலம் பன்னடுக்கு பார்க்கிங் வசதி செய்துதர வேண்டும். இவற்றை சரியாக செய்தால் மட்டுமே எஃப்எஸ்ஐ அதிகரிப்பின் பலன் மக்களுக்கு கிடைக்கும்.

அண்ணா பல்கலைக்கழக நகரிய பொறியியல் துறை முன்னாள் பேராசிரியர் கே.பி.பாலசுப்பிரமணியன்:

குடிநீர் தட்டுப்பாடு, குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது, போக்குவரத்து நெரிசல் போன்றவற்றால் சென்னையில் ஏற்கெனவே சுகாதார சீர்கேடும், சுற்றுச்சூழல் பாதிப்பும் உள்ளது. இந்நிலையில், எஃப்எஸ்ஐ அதிகரிப்பால் வீடுகள் எண்ணிக்கையோடு, மக்கள் நெருக்கடியும் அதிகரிக்கும். சுகாதார சீர்கேடு, சுற்றுச்சூழல் பாதிப்பு மேலும் அதிகரிக்கும். பார்க்கிங் வசதி இல்லாத நிலையில் தனியார் வாகனங்கள் பெருகும். எனவே, அனைத்து அடிப்படை வசதிகள் இருக்கும் இடத்தில் மட்டுமே எஃப்எஸ்ஐ அதிகரிப்பை அனுமதிக்க வேண்டும்.

தொழில்முறை நகரமைப்பு வல்லுநர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சதானந்த்:
1.5 எஃப்எஸ்ஐ இருக்கும் சூழலில், 1000 சதுர அடியில் அதிகபட்சமாக கார் பார்க்கிங், முதல் மற்றும் 2-வது தளத்தில் தலா 750 சதுர அடி என மொத்தம் 1500 சதுர அடியில் 2 வீடுகள் கட்டலாம். இப்போது எஃப்எஸ்ஐ 2 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், 2 கிரவுண்டுக்கு மேல் இடம் உள்ளவர்கள் மட்டுமே பயன்பெற முடியும். ஏனென்றால், 1000 சதுர அடி இருந்தால், அதில் 750 முதல் 800 சதுர அடி அளவில் மட்டுமே வீடு கட்ட முடியும். பக்கவாட்டில் 3 அடி இடம் விடவேண்டி இருப்பதால், தலா 1000 சதுர அடியில் இரண்டு மாடி கட்ட முடியாது.

அதுவே, 10 ஆயிரம் சதுர அடியில் கார் பார்க்கிங், 5 மாடிகளுடன் தலா 4 ஆயிரம் சதுர அடியில் 5 வீடுகள் கட்டலாம். அல்லது தலா 5 ஆயிரம் சதுர அடியில் 4 வீடுகள் கட்ட முடியும். எனவே, எஃப்எஸ்ஐ அதிகரிப்பு என்பது, 150 பேருக்கான சாப்பாட்டை 200 பேர் சாப்பிடுவது போன்றது. நில உரிமையாளரோ, கட்டுநரோ விலையை குறைக்கப்போவது இல்லை. அதனால், வீட்டின் விலை குறையும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. தமிழ்நாடு பொது வளர்ச்சி வழிமுறை மற்றும் கட்டிட விதிகள் - 2018, அரசின் பரிசீலனையில் உள்ளது. இது அமலுக்கு வந்தால்தான், எஃப்எஸ்ஐ அதிகரிப்பு 2 கிரவுண்டுக்கு கீழ் இடம் வைத்திருப்பவர்களுக்கு எந்த அளவுக்கு பயன்படும் என்பது தெரியும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ள னர்.

source : Tamil.thehindu.com