Nagaratharonline.com
 
தொடங்கியது கோடை- UPS பராமரிப்பது எப்படி?  Feb 28, 19
 
வீடுகளில் யு.பி.எஸ். இயந்திரத்தை நிறுவுவது எப்படி, முறையாகப் பராமரிப்பது எப்படி?”

யு.பி.எஸ். இயந்திரத்தை காற்றோட்டமான இடத்தில் வைக்கவேண்டும். படுக்கை அறையில் வைப்பது, உயரமான செஃல்ப் அல்லது பரண் மீது வைப்பது கூடாது. குறிப்பாக, ஈரப்பதம் மிகுந்த அல்லது தண்ணீர்க் குழாய் அருகில் வைப்பது போன்றவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும். மழைச் சாரல் அல்லது தண்ணீர்த் துளிகள் படும் இடத்தில் வைக்கவே கூடாது. முடிந்தால் தனி இடத்தை ஒதுக்கி, அந்த இடத்தில் வைக்க வேண்டும். அடுத்து, மின்சாரம் எடுக்கும் இடத்தில், எர்த்தும், நியூட்ரலும் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். பேட்டரி மற்றும் யு.பி.எஸ்.ஐ இணைக்கும்போது, உறுதியான முறையில் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். யு.பி.எஸ். இயந்திரம் மீது அதிகம் தூசி சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில், உள்ளேயிருக்கும் சர்க்யூட் போர்டு உள்ளிட்டவை மீது தூசி படிந்தால், செயல்திறன் குறைந்துவிடும்.


யு.பி.எஸ்.-ன் பேட்டரிகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பேட்டரியில் உள்ள ஆசிட்டின் அளவு சரியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஆசிட் அளவு குறைந்ததாக இண்டிகேட் செய்தால், டிஸ்டில்டு தண்ணீரை மட்டுமே பேட்டரியில் ஊற்ற வேண்டும். ஏனெனில், டிஸ்டில்டு தண்ணீரில் மட்டுமே எந்தவிதமான தாதுக்களும் இருக்காது. முடிந்தவரை சர்வீஸ் இன்ஜினீயர் அல்லது யு.பி.எஸ். பராமரிப்பாளர்களைக் கொண்டு டிஎஸ்டில்டு தண்ணீர் ஊற்றுவது, பராமரிப்பது போன்ற பணிகளைச் செய்ய வேண்டும்.

பேட்டரியில் உள்ள 6 செல்களும் சுத்தமாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். இந்த பேட்டரிகளில் இருந்து சில சமயம் ரசாயன வாயு வெளியேறும். அதனால்தான் படுக்கை அறையில் யு.பி.எஸ். வைக்க வேண்டாம்.

கோவையில் ஒரு குழந்தைக்கு தோல் பிரச்சினை ஏற்பட்டது. என்ன காரணமென்றே தெரியவில்லை. கடைசியில்தான் படுக்கை அறையில் உள்ள யு.பி.எஸ். கருவியிலிருந்து வெளியேறிய வாயுதான் பிரச்சினைக்குக் காரணம் எனத் தெரியவந்தது. யு.பி.எஸ்.-ல் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், இன்ஜினீயர்கள் அல்லது பராமரிப்பாளர்களின்றி, தாமாகவே சரி செய்ய முற்படக் கூடாது.

வெயில் காலத்தில் திடீரென பேட்டரி சூடு அதிகமாகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். தேவையற்ற சப்தம் வந்தாலோ, இண்டிகேட்டர் பிளிங்க் ஆனாலோ உடனடியாக இன்ஜினீயரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இப்போதெல்லாம், பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் யு.பி.எஸ். கருவிகள்வந்துவிட்டன. எனினும், பேட்டரிகளை பொறுத்தவரை, 3, 4 வருடங்களாகிவிட்டால், அதன் செயல்திறன் குறையும். அப்போது மின்சார உபயோகம் அதிகரித்து, மின் கட்டணமும் அதிகரிக்கும். எனவே, நீண்டகாலம் வாரண்டி கொடுக்கும் பேட்டரிகளையே தேர்வுசெய்ய வேண்டும்.