|
NEWS REPORT: 16/5/2019 - வேந்தன்பட்டி ஸ்ரீ வைத்தியநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் Mar 8, 19 |
|
|
|
|
|
|
|
|
|
புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டிக்கு தெற்கே 8 கி.மீ தூரத்தில் உள்ள சிவத்தலம், திருக்களம்பூர் திருக்காப்பு நாயகி சமேத ஸ்ரீ வைத்தியநாதசுவாமி திருக்கோயில்.
1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயில், 2002 ம் ஆண்டில், வேந்தன்பட்டி பழ. மெ குடும்பத்தாரால் திருப்பணி செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. மீண்டும் இப்போது, 16 ஆண்டுகள் கழித்து, கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் துவங்கி, நடைபெற்று வருகின்றன. . வேந்தன்பட்டி பழ.மெ. குடும்பத்தார்களும் திருக்களம்பூர் பொதுமக்களும் இணைந்து ஆலயத் திருப்பணி திருப்பணிகளை அழகுற செய்து வருகின்றனர்.
"கதலி" என்றால் வாழை என்ற பொருள். வாழை மரங்கள் சூழ்ந்த வனத்தில் குடிகொண்ட இறைவன் என்பதால் கதலிவனேஸ்வரர் ( கதலி வன ஈஸ்வரர் ) என்று அழைக்கப்படுகிறார் . மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன், சோழ மன்னர் மீது படையெடுத்துச் செல்லும் பொருட்டு, ஒரு வாழைத்தோப்பு நடுவே செல்லும்போது அவனது குதிரை கால் குளம்பு, சுயம்பாக தோன்றிய சிவலிங்கத்தின்மீது தெரியாமல் பட்டுவிட அதிலிருந்து ரத்தம் கசிய ஆரம்பித்தது. இந்த தெய்வ குற்றத்தின் காரணமாக மன்னருக்கு கண் பார்வை பறி போய்விட்டது. தெரியாமல் செய்த தவறுக்கு மன்னன் லிங்கத்தின் முன் அழுது புரண்டான்.
ஒரு நாள் அரசன் கனவில் , "சுயம்பாக இருக்கும் இடத்தில் அழகுற ஒரு ஆலயம் அமைத்து வழிபடுக" என்று அசரீரியாக குரல் சொல்லியது. மன்னனும் ஆலயம் எழுப்புவதாக உறுதி கூற, அவரின் பார்வை திரும்பியது. இதையொட்டி கதலிவனநாதருக்கு, ஸ்ரீ வைத்தியநாதசுவாமி என்ற பெயரும் உண்டு. இன்றும் மூலவரின் மேல் குதிரையின் குளம்படிபட்ட வடுக்களைக் காணலாம். அதனால்தான் இவ்வூர் ‘திருக் குளம்பூர்’ என்று அழைக்கப்பெற்று, பின்னாளில் திருக்களம்பூர் என ஆயிற்று . பாண்டிய மன்னர்கள் எங்கே கோயில் கட்டினாலும், ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் இல்லாமல் கட்டுவது இல்லை. இங்கேயும், பிராகாரத்தில் ஸ்ரீமீனாட்சியும் ஸ்ரீசொக்கநாதரும் தனிக்கோயிலில் அருள் பாலிக்கிறார்கள்.
‘‘இங்கு வீற்றிருக்கும் மூலவர், சுயம்புலிங்கம். அவரைச் சுற்றிலும் பிராகாரத்தில் உள்ள வாழை மரங்களும் சுயம்புதான். இந்த வாழை மரங்களுக்கு யாரும் தண்ணீர் பாய்ச்சுவது இல்லை. மழை நீரை மட்டுமே உறிஞ்சி வளரும் வாழைமரங்கள் இவை. இங்கு தோன்றும் வாழைக் கன்றுகளை வெளியே வேறு எங்கு கொண்டு போய் வைத்தாலும் வளராது. அதேபோல், வெளியிடங்களிலிருந்து வாழைக் கன்றுகளைக் கொண்டுவந்து கோயிலுக்குள் வைத்தாலும் வளராது. அது மட்டுமன்று; இந்த வாழைமரத்தின் காய், பூ, தண்டு, பழம் எதையும் மனிதர்கள் சாப்பிடக் கூடாது. வாழைப்பழம் பழுத்த பின்னர், அதைப் பஞ்சாமிர்தம் செய்து சுவாமிக்கு அபிஷேகம் செய்த பின்னரே சாப்பிடலாம். இதனால் உடலில் உள்ள வியாதிகள் குணமாகும் என்பது நம்பிக்கை.
இங்குள்ள வாழைகளில் இன்னோர் அதிசயம்... இவற்றின் பழங்கள் பார்க்க மலைப்பழம் போல இருக்கும். ஆனால், உரித்தால் ரஸ்தாளிப் பழம் போல இருக்கும். அதேபோல, மரத்தை வெட்டினால் ரத்தம் போல சிவப்பு நிறத் திரவம் வெளிவரும். ஆனால், இவை செவ்வாழைகளும் அல்ல.
தல விருட்சம் " வாழை" என்பது இந்தக்கோவிலுக்கே உள்ள தனிச் சிறப்பு.
பிணிகளால் அவதிப்படுவோர், வைத்தியநாத சுவாமிக்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், விபூதி, பால் ஆகிய பொருள்களை அபிஷேகம் செய்து, பின்னர் அந்தப் பிரசாதங்களைச் சாப்பிட, நோய்கள் தீரும்’’.
குழந்தை வரம் வேண்டுவோர் தம்பதி சமேதராக இங்கு வந்து, திருக்காப்பு நாயகியின் திருவடி வணங்கி, வாழைக்காய்களை சமர்ப்பித்து வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருக்களம்பூருக்குச் சென்று திருக்காப்பு நாயகி சமேத ஸ்ரீ வைத்தியநாதசுவாமியை வழிபடுவோம் !
வாழையடி வாழையாய் நம் குடும்பம் வளர்ந்து செழிக்கட்டும் ! |
|
|
|
|
|