Nagaratharonline.com
 
காரைக்குடியில் சாலைகள் படுமோசம் கேள்விக்குறியாகிறது தேர் திருவிழா  Mar 23, 19
 
காரைக்குடி செஞ்சை பகுதியில் நாகநாதப் பெருமாள் கோயில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோயில் மூலவர் கடலில் இருந்து கிடைத்ததாக கூறப்படுகிறது.


நகரத்தார் இந்த கோயிலை கட்டி பராமரித்து வருகின்றனர். சிவனும்,பெருமாளும் ஒரே இடத்தில் வீற்றிருப்பது இந்த கோயிலின் தனி சிறப்பாகும். இந்த கோயிலில் உள்ள தாயார் செண்பகவள்ளியம்மன் மிகவும் பிரசித்தி பெற்றவராக உள்ளார். திருமணமாகாத பெண்கள் புதன் கிழமை இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் திருமணம் விரைவில் நடக்கும் என்று இப்பகுதி மக்கள் நம்புகின்றனர். காரைக்குடியில் உள்ள பெருமாள் கோயில் இது ஒன்றேயாகும். வரும் ஏப்ரல் 5ம் தேதியன்று இக்கோயிலில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது .ஏப்ரல் 13ம் தேதியன்று தேரோட்டம் நடைபெற உள்ளது.


தேரோட்டம் நடைபெற உள்ள நான்கு ரத வீதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டாலும் இன்னும் மேடு பள்ளங்களாக காட்சியளிக்கிறது. தேரோட்டம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. விரைந்து நான்கு ரத வீதிகளில் குவியலாக உள்ள மண்மேடுகளை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர். இதனை சரி செய்ய பல முறை காரைக்குடி நகராட்சியை வலியுறுத்தியும் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருக்கிறது.