Nagaratharonline.com
 
செங்கல்பட்டு புதிய மாவட்ட அறிவிப்பால் பொதுமக்கள்... மகிழ்ச்சி  Jul 20, 19
 
செங்கல்பட்டு மாவட்டம் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், புதிய தொழிற்சாலைகள் உருவாகி, வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும், அரசு திட்டங்கள் எளிதாக கிடைக்கும் என, பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆங்கிலேயர்கள், தொண்ட மண்டல பகுதிகளான, தற்போதைய, திருவண்ணாமலை, வேலுார், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய செங்கல்பட்டை, 1763 முதல் நிர்வகித்து வந்தனர்.சென்னை மாகாணம் உருவாக்கப்பட்ட போது, செங்கல்பட்டு, ஒரு மாவட்டமாக இருந்தது. இதன் எல்லையாக, சென்னையில் சைதாப்பேட்டை, ஆந்திர எல்லையில் உள்ள கும்மிடிபூண்டி வரை இருந்தது.

மாவட்டங்கள் சேர்ப்பு கடந்த, 1967ம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்ட தலைநகரம், காஞ்சிபுரத்திற்கு மாற்றப்பட்டது. நிர்வாக நகரமாக காஞ்சிபுரத்தையும், நீதி நகரமாக செங்கல்பட்டையும், அப்போதைய முதல்வர், அண்ணாதுரை அறிவித்தார்.இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, செங்கை அண்ணா மாவட்டம் எனவும், செங்கை எம்.ஜி.ஆர்., மாவட்டம் எனவும், பெயர் சூட்டப்பட்டது.

கடந்த, 1997ம் ஆண்டு, தி.மு.க., ஆட்சியில், செங்கை அண்ணா மற்றும் செங்கை எம்.ஜி.ஆர்., மாவட்டத்தை ஒருங்கிணைத்து, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் என, தனித்தனியாக பிரிக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த, சட்டசபை கூட்டத்தில், 110 விதியின் கீழ், 'காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து, செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டம் செயல்படும்' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார்.

புதிய மாவட்டத்தில் அமையவுள்ள தாலுகாக்களின் உத்தேச விபரம் தாலுகா அலுவலகம்: செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மதுராந்தகம், தாம்பரம், பல்லாவரம்.