|
பூலாங்குறிச்சி மலையில் குவாரி அமைக்க வருவாய்த் துறையினர் தடை May 13, 10 |
|
திருப்பத்தூர்,மே 12: பூலாங்குறிச்சி மலையில் புராதன கல்வெட்டுகள் அமைந்துள்ள மலையில் குவாரி அமைக்க வருவாய்த் துறையினர் தடை விதித்துள்ளனர்.
திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் கி.பி.5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புராதன கல்வெட்டுகள் உள்ள மலைத்தொடர் உள்ளது. இதில் டாமின் அனுமதித்துள்ளதாகக் கூறி கீழவளைவைச் சேர்ந்த சிலர் குவாரி அமைக்க ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இதற்குப் பூலாங்குறிச்சி ஊராட்சிமன்றத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
புராதனக் கல்வெட்டுகள் உள்ள மலையில் குவாரி நடத்த அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், தேவகோட்டை கோட்டாட்சியர் அண்ணாத்துரை குவாரி அமைப்பது குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மலைப்பகுதியை வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் இளங்கோ ஆகியோர் பார்வையிட்டு, அங்கு நடந்திருந்த ஆயத்தப்பணிகள் மேலும் தொடராமல் இருக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர்.
கிராமத்தினரிடம், யாரும் குவாரிப் பணிகளில் ஈடுபட்டால், அதைத் தடுத்து வருவாய்த் துறையினருக்குத் தகவல் தெரிவிக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
Source:Dinamani
May 12 |
|
|
|
|
|