|
இனி தாராளமாக தத்கல் டிக்கெட் எடுக்கலாம்: முன்பதிவில் நடந்த மென்பொருள் மோசடிகள் அம்பலம் Feb 19, 20 |
|
தத்கல் டிக்கெட்டுகளை பயணிகளுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வகையில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வந்த மென்பொருள் பயன்பாடுகள் கண்டுபிக்கப்பட்டு, அகற்றப்பட்டன.
தத்கல் டிக்கெட்டுகளை பொதுமக்கள் பார்க்க விடாமல் தடுத்து, இந்த சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டு வந்த 60 ஏஜெண்டுகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை பொது மேலாளர் அருண் குமார் கூறுகையில், ரயில்வே இணையதளத்தில் தத்கல் முன்பதிவு தொடங்கியதும், இனி பயணிகள் முன்பதிவு செய்ய ஒரு மணி நேரம் வரை கூட நேரம் கிடைக்கும். இதுவரை சில நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரமே கிடைத்து வந்தது. இதற்குக் காரணமாக இருந்த களைகள் அகற்றப்பட்டுவிட்டன என்று கூறினார்.
சட்டவிரோதமாக ஏஎன்எம்எஸ், எம்ஏசி, ஜாகுவார் போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்தி சில ஏஜெண்டுகள், ஐஆர்சிடிசி இணையதளத்தில் இருக்கும் லாகின் கேப்சா, புக்கிங்க் கேப்சா, வங்கி ஓடிபி ஆகியவற்றை எளிதாகக் கடந்து சென்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வந்தனர். இதனால், பொதுமக்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதில் பெரும் இடையூறு இருந்தது.
பொதுவாக ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்ய பொதுமக்களுக்கு 2.55 நிமிடங்கள் ஆகும். ஆனால், இந்த சட்டவிரோத மென்பொருளைப் பயன்படுத்தி வெறும் 1.48 நிமிடங்களிலேயே ஏஜெண்டுகள் தத்கல் டிக்கெட் முன்பதிவு செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இனி இதுபோன்ற சட்டவிரோத கும்பலால் ஒரு டிக்கெட்டைக் கூட முன்பதிவு செய்ய முடியாது. அதில் இருந்த அனைத்துப் பாதுகாப்புக் குறைபாடுகளும் களையப்பட்டுவிட்டன. எந்த மென்பொருளையும் பயன்படுத்த முடியாத வகையில் ஐஆர்சிடிசி இணையதளம் மாற்றப்பட்டுவிட்டது என்றும் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டவிரோத மென்பொருட்களைப் பயன்படுத்தி ஏஜெண்டுகள் ஆண்டுக்கு ரூ.50 கோடி முதல் 100 கோடி வரை பணம் சம்பாதித்து வந்துள்ளனர். தற்போது இது தடுத்து நிறுத்தப்பட்டதால், தத்கல் முன்பதிவில் அது நன்றாகவே எதிரொலிக்கிறது.
உதாரணமாக, 2019, அக்டோபர் 26ம் தேதி மகத் விரைவு ரயிலுக்கான தத்கல் டிக்கெட் முன்பதிவுக்கு வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், அதே ரயிலுக்கு 2020, பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை சுமார் 10 மணிநேரங்கள் தத்கல் முன்பதிவுக்கு வாய்ப்பு இருந்தது.
தொடர்ந்து இதுபோன்ற சட்டவிரோத மென்பொருட்கள் பயன்பாடு கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அருண் குமார் தெரிவித்துள்ளார். |
|
|
|
|
|